மனைவி பியூட்டி பார்லர் சென்று தனது புருவத்தை திருத்தியிருந்ததை பார்த்து ஆத்திரமடைந்த கணவர், ‘வீடியோ’ கால் வாயிலாக முத்தலாக் கூறி திருமண உறவை முறித்துக் கொண்ட சம்பவம் உத்தர பிரதேச மாநிலத்தில் அரங்கேறியுள்ளது.
உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜ் பகுதியைச் சேர்ந்தவர் முகமது சலீம். இவருக்கும் கான்பூரைச் சேர்ந்த குல்சபா என்ற பெண்ணுக்கும் கடந்த 2022ல் திருமணம் நடந்தது.
முகமது சலீம் அரபு நாடான சவுதி அரேபியாவில் வேலை பார்த்து வருகிறார். அவரது மனைவி உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் வசித்து வருகிறார். இருவரும் அடிக்கடி ‘மொபைல் போன் வாயிலாக வீடியோ’ காலில் தினந்தோறும் பேசி வந்தனர். அப்படி சமீபத்தில் பேசும்போது குல்சபாவின் புருவங்கள் திருத்தப்பட்டுள்ளதை பார்த்து முகமது அதிர்ச்சி அடைந்தார்.
அது பற்றி கேட்டபோது அழகு நிலையம் சென்று புருவத்தை திருத்திக் கொண்டதாக குல்சபா தெரிவித்தார்.
இதனால் ஆத்திரம் அடைந்த முகமது சலீம், ‘என் அனுமதி இன்றி இது போன்ற செயல்களில் ஏன் ஈடுபட்டாய்?’ என சத்தம் போட்டதுடன் மூன்று முறை தலாக் கூறி திருமண உறவை முறித்துக் கொண்டார். இந்த சம்பவம் கடந்த மாதம் அக்டோபர் 4ம் தேதி நடந்துள்ளது. இது பற்றி குல்சபா காவல் நிலையத்தில் புகார் அளித்த பின்னரே பொதுவெளிக்கு வந்தது.
அது மட்டுமின்றி தனது மாமியார் மற்றும் அவரது உறவினர்கள் வரதட்சணை கேட்டு துன்புறுத்துவதாகவும் குல்சபா தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார். இதை தொடர்ந்து முகமது சலீம் மீது மனைவியை துன்புறுத்தியது, வரதட்சணை கொடுமை உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
முத்தலாக் நடைமுறையை முற்றிலுமாக ஒழித்து பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு கடந்த 2019ல் சட்டம் இயற்றியது. இதன் காரணமாகவே முத்தலாக் வாயிலாக விவாகரத்து கோருவது நம் நாட்டில் சட்டப்படி குற்றம் ஆகும். பிரதமர் கொண்டுவந்த முத்தலாக் தடை சட்டத்தின்படி ஒவ்வொரு இஸ்லாமிய பெண்களும் விழிப்படைந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.