தீபாவளி பண்டிகை வருவதை முன்னிட்டு பட்டாசுக் கடைகள் வைப்பதற்கு திமுக அரசு உரிமம் வழங்காமல் இழுத்தடிப்பதற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அனைத்துத் தரப்பு பொதுமக்களும் வெகு விமரிசையாகக் கொண்டாடும் தீபாவளிப் பண்டிகைக்கு, இன்னும் ஒரு வார காலமே இருக்கும் நிலையில், பட்டாசுக் கடைகள் வைக்க விரும்புவோருக்கு, இன்னும் பட்டாசு விற்பனைக்கான உரிமம் வழங்காமல் இழுத்தடித்துக் கொண்டிருக்கிறது திமுக அரசு.
பட்டாசுக் கடைகள் வைக்க விரும்புவோர் இணைய வழியாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்று விதிமுறை கொண்டு வந்த திமுக அரசு, அதற்கான கட்டணம் ரூபாய் 600 வசூலித்து விட்டு, உரிமம் வழங்காமல் தமிழகம் முழுவதும் சுமார் 7,000 சிறு வியாபாரிகளை அலைக்கழித்துக் கொண்டிருக்கிறது. உரிமம் கிடைக்கப்பெறாததால், ஆலைகளிலிருந்து பட்டாசுக¬க் கொள்முதல் செய்ய முடியாமல் சிறு வணிகர்களும், பட்டாசு ஆலைகளும் தத்தளித்துக் கொண்டிருக்கின்றனர்.
பண்டிகைக்கு இன்னும் ஒரு வார காலமே உள்ள நிலையில், விற்பனை உரிமம் வழங்காமல் விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் மட்டும் பல ஆயிரம் கோடி மதிப்புள்ள பட்டாசுகளை ஆலைகளில் முடங்க வைத்திருப்பது, திமுக அரசின் உண்மையான நோக்கம் குறித்த சந்தேகத்தை எழுப்புகிறது. பல கோடி செலவு செய்து, வீண் விளம்பரங்களுக்கு முன்னுரிமை கொடுத்துத் திட்டம் தீட்டும் திமுக, மக்களின் பண்டிகைக் கால வாழ்வாதாரத்தை, மெத்தனப் போக்கில் அணுகுவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
பட்டாசு விற்பனை உரிமம் பெற ஆகும் காலதாமதம், பெரும் விற்பனையாளர்களுக்கு மட்டுமே பலன் தருவதோடு, கடும் விலையுயர்வையும் பொதுமக்கள் எதிர்கொள்ளக் காரணமாக இருக்கும் என்பதால், திமுகவினர் தொடர்புடைய தனியார் நிறுவனங்கள் இப்போது பட்டாசு விற்பனையிலும் ஈடுபடத் தொடங்கியிருக்கிறார்களோ என்ற கேள்வியை மக்கள் மத்தியில் எழுப்பியிருக்கிறது. திமுகவினர் வரலாறு அப்படி இருப்பதால், பொதுமக்களின் இந்தக் கேள்வியைப் புறம்தள்ளி விட முடியாது.
முந்தைய ஆண்டுகளில், காவல்துறை, தீயணைப்புத்துறை, உள்ளாட்சித்துறை ஆகிய மூன்று துறைகளில் அனுமதிக் கடிதம் பெற்றாலே உரிமம் வழங்கப்பட்டு வந்தது. இந்த ஆண்டு கூடுதலாக, தாசில்தாரிடமும், தனிநபர் ஒருவரிடமும், மொத்தம் ஐந்து அனுமதிக் கடிதங்களை வியாபாரிகள் பெற வேண்டும் எனத் திமுக அரசு கூறியிருக்கிறது. இவற்றில் ஏதோ ஒரு காரணத்தைச் சொல்லி, உரிமம் வழங்குவதைத் தட்டிக் கழிக்கிறது திமுக அரசு. இதனால், சிறு வியாபாரிகளே பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அதுதான் திமுகவின் நோக்கமாகவும் தெரிகிறது.
பண்டிகைக் கொண்டாட்டங்கள் மக்களின் வாழ்வாதாரம் என்பதை உணர்ந்து, உடனடியாக விண்ணப்பித்துள்ள பட்டாசு வியாபாரிகள் அனைவருக்கும் உரிமம் வழங்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும், இன்னும் தேவையற்ற தாமதத்தை ஏற்படுத்தி, வியாபாரிகள் மற்றும் பொதுமக்களைப் போராட்டத்திற்குத் தூண்ட வேண்டாம் என்றும் திமுக அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அண்ணாமலை தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.