மகாதேவ் சூதாட்ட நிறுவனத்திடம் இருந்து சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பெகல் ரூ.508 கோடி பணம் பெற்றுள்ளார் என பாஜக குற்றம்சாட்டியுள்ளது.
இது தொடர்பாக, டெல்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, “சத்தீஸ்கர் சட்டப்பேரவைத் தேர்தலுக்காக மகாதேவ் சூதாட்ட செயலி நிறுவனத்திடம் இருந்து ஹவாலா பணமாக ரூ.508 கோடியை சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பெகல் பெற்றுள்ளார். இதுபோன்ற ஒரு மோசடியை மக்கள் அறிந்திருக்க மாட்டார்கள்.
நமது நாட்டின் தேர்தல் வரலாற்றிலும் இதுபோன்று இதற்கு முன் நடந்தது கிடையாது. அதிகாரத்தில் இருந்து கொண்டு அவர் இத்தகைய குற்றத்தில் ஈடுபட்டுள்ளார்.
சத்தீஸ்கர் காவல் துறை மற்றும் ஆந்திரப் பிரதேச காவல் துறை அளித்துள்ள தகவல்களின் அடிப்படையில் அமலாக்கத்துறை மேற்கொண்ட விசாரணையில் இந்த விஷயம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. தனது செயல் மூலம் தனது அரசை மிகப் பெரிய நெருக்கடியில் பூபேஷ் பெகல் தள்ளி இருக்கிறார்.
இந்த விஷயத்தில் தொலைபேசியில் பேசியதற்கான ஆதாரம், குற்றம்சாட்டப்பட்டுள்ள நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் அவர்கள் தெரிவித்த தகவல்களின் அடிப்படையில் விசாரணை நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக தடயவியல் சோதனையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது’’ என்று ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார்.