கோவை கார் வெடிகுண்டு வழக்கு: 14வது நபரை கைது செய்த என்.ஐ.ஏ.!

கோவை கோட்டைமேடு சங்கமேஸ்வரர் கோயில் அருகே கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் பயங்கரவாதிகளால் நடத்தப்பட இருந்த ஒரு தற்கொலை தாக்குதல், சங்கமேஸ்வரர் அருளால் முறியடிக்கப்பட்டது.  ஒரு காரில் பயங்கர வெடிகுண்டுகள் நிரப்பி வந்த போது கார் வெடித்து சிதறியது. காரை ஓட்டி வந்த ஜமேஷா முபின் என்ற பயங்கரவாதி உயிரிழந்தான்.  அதிர்ஷடவசமாக கோயிலுக்கோ உயிர்களுக்கோ மிகப்பெரிய சேதம் ஏற்படவில்லை.

திமுக அரசு, இதை சிலிண்டர் வெடிப்பு  என்று சொல்லி வந்த நிலையில், மாநிலத் தலைவர் அண்ணாமலையின் வலியுறுத்தலால், தேசிய புலனாய்வு  முகமைக்கு வழக்கு ஒப்படைக்கப்பட்டது.  விசாரணையில்  வெடிகுண்டு சதிச்செயலில் ஈடுபட்டதாக 13 பேரை என்.ஐ.ஏ., அதிகாரிகள் கைது செய்தனர்.

தொடர்ந்து பல்வேறு கோணங்களில் அதிகாரிகள் நடத்திய விசாரணையில் போத்தனூர் திருமலை நகர் அருகேயுள்ள மதீனா அவென்யூ பகுதியைச் சேர்ந்த அப்துல்காதர் மகன் தாஹா நசீர் (27) என்பவருக்கு சதியில்  தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இதை தொடர்ந்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் அவரை நேற்று (நவம்பர் 3) கைது செய்தனர். பின்னர் அவர் பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இது பற்றி என்.ஐ.ஏ. அதிகாரிகள் கூறியதாவது: கார் வெடிகுண்டு தாக்குதல் சதியில் உயிரிழந்த முபின், இவ்வழக்கில் முன்னரே கைது செய்யப்பட்ட முகமது தவுபீக், தற்போது கைது செய்யப்பட்ட தாஹா நசீர் ஆகியோர் குண்டு வெடிப்பு சம்பவத்துக்கு சில நாட்களுக்கு முன்னர், கோட்டைமேடு பகுதியில் உள்ள முபினின் வீட்டில் சந்தித்துப் பேசி, சதித் திட்டம் தீட்டியுள்ளனர்.

வெடி மருந்து நிரப்பப்பட்டகாரை முபின் ஓட்டிச் சென்றதில் தாஹா நசீருக்கும், தவுபீக்குக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது தெரியவந்தது. தாஹா நசீரின் பொருட்களை ஆய்வு செய்தபோது, ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத ஆதரவு வாசகங்கள் அடங்கிய தகவல்களை அவர் பதிவிறக்கம் செய்திருந்ததும் கார் வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து தனது டிஜிட்டல் பொருட்களில் இருந்த தகவல்களை சிறப்பு செயலிகளைப் பயன்படுத்தி அழித்ததும் தெரியவந்தது.

மேலும், கைதான தாஹா நசீரும், முகமது தவுபீக்கும் சிறு வயதிலிருந்தே நெருங்கிய நண்பர்கள் என்பது தெரியவந்துள்ளது. இதில் இன்னும் யார், யாருக்கு தொடர்பு இருக்கிறது என்பதை என்.ஐ.ஏ., அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர், என்றார். 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top