புதுக்கோட்டை மாவட்டத்தில் ரகுபதி, சிவ மெய்யநாதன் என இரு அமைச்சர்கள் இருந்தும், வேலைவாய்ப்புகள் வழங்க ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:
நேற்றைய மாலை (நவம்பர் 5) என் மண் என் மக்கள் பயணம், சோலைகளும், சுனைகளும், மயில்களும் நிரம்பிய, ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல், சண்முகநாதனாக மக்களைக் காத்தருளும் முருகப் பெருமான் அருள்பாலிக்கும் விராலிமலை தொகுதியில், பெரும் மக்கள் திரள் சூழ இனிதே நடந்தேறியது. நமது தேசியப் பறவையான மயில், அதிகம் உள்ள ஊர் விராலிமலை.
இங்குள்ள விளாப்பட்டி மற்றும் பெரியமூளிப்பட்டி கிராமங்களில், 2000 ஆண்டுகள் தொன்மையான இரும்பு உருக்கு ஆலைகள், பானை ஓடுகள் கண்டெடுக்கப்பட்டன. 2000 ஆண்டுகளுக்கு முன்பே தமிழனின் தொழில் முனைப்பு மற்றும் அறிவியல் வளர்ச்சியின் வெளிப்பாடாகவே இது தெரிகிறது. தென்னிந்தியாவின் அஜந்தா குகை என்று போற்றப்படும், மூலிகைகளால் வரையப்பட்ட சித்தன்னவாசல் குகை ஓவியங்கள், 7ம் நூற்றாண்டில், (கி.பி.600 – 630) பல்லவ மன்னன் மகேந்திரவர்மன் காலத்தில் வரையப்பட்டவை.
சனாதன தர்மத்தில் அனைத்து மக்களும் சமம் என்பதற்குச் சான்று, விராலிமலை ராஜாளிப்பட்டி ஸ்ரீ ராஜராஜேஷ்வரி உடனுறை சந்திரமவுலீஸ்வரர் கோவிலில், சமீபத்தில் நடைபெற்ற வள்ளி திருமணத்துக்கு, குறவர் சமுதாயத்தைச் சேர்ந்த மலைவாழ் மக்கள், மணமகள் வள்ளி சார்பில் சீர்வரிசைகளுடன் மேள தாளம் முழங்க ஊர்வலமாக சிவன் கோவிலில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு சீர் வரிசை வழங்கியதே ஆகும்.
இந்த ஆண்டு மார்ச் மாதம் 29 அன்று, புதுக்கோட்டை உட்பட தமிழகத்தில் 8 மாவட்டங்களில் நிலக்கரி எடுக்க நமது மத்திய அரசு ஒப்பந்தம் கோரியது. இதனால் விவசாயம் பாதிக்கப்படும் என்று இந்த பகுதி விவசாயிகள் தெரிவிக்கவே, ஏப்ரல் 5ஆம் தேதி, மாண்புமிகு மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி அவர்களிடம் தமிழக பாஜக சார்பாக அவரைச் சந்தித்து கோரிக்கை வைத்தோம். இரண்டே நாட்களில் டெல்டா பகுதியில் விடப்பட்ட நிலக்கரி ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது. கடந்த காங்கிரஸ் திமுக கூட்டணி ஆட்சியில் மீத்தேன் திட்டத்திற்கு கையெழுத்து போட்டுவிட்டு, மூன்று வருடம் கழித்து நாடகம் ஆடவில்லை. மக்கள் பிரச்சினைக்கு தீர்வு என்ன என்பதை மட்டும் தான் எப்போதும் பாஜக சிந்திக்கும். விவசாயிகளுக்கு பக்கபலமாக என்றும் பாஜக துணை நிற்கும் என்பதற்கு இந்த நிலக்கரி ஒப்பந்தம் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.
புதுக்கோட்டை மாவட்டத்தில், 47,594 பேருக்கு பிரதமரின் வீடு திட்டம் மூலம் வீடு, 1,64,506 வீடுகளில் குழாயில் குடிநீர், 1,43,184 வீடுகளில் இலவச கழிப்பறைகள், 1,64,792 பேருக்கு ரூபாய் 300 மானியத்துடன் இலவச சமையல் ,எரிவாயு இணைப்பு, 75,667 பேருக்கு, பிரதமரின் 5 லட்ச ரூபாய் மருத்துவ காப்பீடு, 1,28,995 விவசாயிகளுக்கு வருடம் 6000 ரூபாய், புதுக்கோட்டை மாவட்டத்திற்கு 2556 கோடி ரூபாய் முத்ரா கடன் உதவி என மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் தலைமையிலான மத்திய அரசு செய்துள்ள நலத்திட்டங்கள் ஏராளம்.
தமிழகத்தில் மிகவும் பின்தங்கிய மாவட்டங்களில் ஒன்று புதுக்கோட்டை. புதுக்கோட்டை மாவட்டத்தில் ரகுபதி, சிவ மெய்யநாதன் என இரு அமைச்சர்கள் இருந்தும், வேலைவாய்ப்புகள் வழங்க ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. தமிழகத்தின் சட்டம், ஊழல் தடுப்பு மற்றும் சிறைத்துறை அமைச்சர் ரகுபதி. இவர் மேலேயே ஊழல் வழக்குகள் உள்ளன. துர்கா அம்மாவால் தான் எனக்கு அமைச்சர் பதவி கிடைத்தது என்று சொல்லும் இன்னொரு அமைச்சர் மெய்யநாதன், மக்களுக்கு என்ன சேவை செய்வார்?
வரும் பாராளுமன்ற தேர்தலில், இந்த மக்கள் விரோத சுயநல திமுக கூட்டணியை முழுவதுமாகப் புறக்கணிப்போம். மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் நல்லாட்சி தொடர, தமிழகம் முழுவதும், பாஜக கூட்டணி வேட்பாளர்களையே தேர்ந்தெடுத்து வெற்றி பெறச் செய்வோம். இவ்வாறு அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.