தமிழகத்தில் நவம்பர் 19ல் 55 இடங்களில் ஆர்.எஸ்.எஸ்., அணிவகுப்பு!

தமிழகத்தில் வருகின்ற 19ம் தேதி 55 இடங்களில் ஆர்.எஸ்.எஸ்., அணிவகுப்பு ஊர்வலம் நடக்க இருப்பதாக அந்த அமைப்பின் வட தமிழக மாநிலத் தலைவர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் அளித்த பேட்டி: ஆர்.எஸ்.எஸ்., தேசிய செயற்குழு கூட்டம் குஜராத் மாநிலம் புஜ் நகரில் நவம்பர் 5 முதல் 7ம் தேதி வரை நடந்தது.

ஆர்.எஸ்.எஸ்., நூற்றாண்டையொட்டி ஜாதி வேறுபாடுகளை களைந்து சமுதாய நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது குடும்ப அமைப்பை பாதுகாப்பது, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, சுதேசி வாழ்க்கை முறை, சமூக ஒழுக்கத்தை ஏற்படுத்துவது ஆகிய ஐந்து முக்கிய விஷயங்கள் குறித்து முடிவெடுக்கப்பட்டது.

அயோத்தி ஸ்ரீராமர் கோவில் கும்பாபிஷேகம் ஜனவரி 22ல் நடக்கவுள்ளது. அதை முன்னிட்டு ஜனவரி 1 முதல் 15 வரை வீடு, வீடாகச் சென்று ஸ்ரீராம ஜென்மபூமி படம் அயோத்தியில் பூஜிக்கப்பட்ட அட்சதையுடன் அழைப்பிதழ் கொடுக்க முடிவு செய்துள்ளோம்.

உலகம் தழுவிய அமைப்பாக ஆர்.எஸ்.எஸ்., வளர்ந்துள்ளது. தமிழகத்தில் பயிற்சி பெற்ற ஊழியர்கள் 20 ஆயிரத்திற்கும் அதிகமாக உள்ளனர்.

ஆர்.எஸ்.எஸ்., அணிவகுப்புக்கு கருணாநிதி முதல்வராக இருந்தபோது தொடர்ந்து அனுமதி அளித்தார்.  உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி, கடந்த ஆண்டும் ஆர்.எஸ்.எஸ்., அணிவகுப்பு நடந்தது.

இந்த ஆண்டு காவல் துறை அனுமதி மறுத்ததால் உச்ச நீதிமன்ற உத்தரவின்படி வரும் 19ம் தேதி அணிவகுப்பு நடக்கவுள்ளது. இது தொடர்பாக, டி.ஜி.பி.,யை சந்தித்துப் பேசி உள்ளோம்.

ஆகம பயிற்சி பெற்றவர்கள் யாராக இருந்தாலும், எந்த ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்பதுதான் ஆர்.எஸ்.எஸ்., இயக்கத்தின் நிலைப்பாடு. ஆனால் அவர்கள் முறையான ஆகம பயிற்சி பெற்றவர்களாக இருக்க வேண்டும்.

அதுபோல கலப்பு திருமணத்தையும் ஆதரிக்கிறோம். ஆனால், திருமணத்தை ஒரு கருவியாகப் பயன்படுத்தி மதமாற்றம் போன்ற செயல்களில் ஈடுபடுவதை எதிர்க்கிறோம். இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது, ஆர்.எஸ்.எஸ்., மாநிலச் செயலர் ஜெகதீசன், மாநில செய்தித் தொடர்பாளர் நரசிம்மன் ஆகியோர் உடனிருந்தனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top