நாங்குநேரி சம்பவங்களில் ஆளும் கட்சியினர் பின்னணியில் இருப்பதால் முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்கத் தயங்குகிறார் என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் குற்றம்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக மத்திய இணையமைச்சர் எல்.முருகன் நேற்று (நவம்பர் 21) வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி நீதிமன்றம் அருகே ஜெராக்ஸ் கடை ஒன்றின் மீது நாட்டு வெடிகுண்டு வீசித் தாக்குதல் நடந்துள்ளது. இது தொடர்பாக 12ம் வகுப்பு படிக்கும் சிறுவனை போலீசார் கைது செய்துள்ளனர் என்கிற ஆரம்பக்கட்ட தகவல் அர்ச்சியைத் தருகிறது. கடையின் மீது இரண்டு குண்டுகள் வீசப்பட்டுள்ளது. அதில் ஒன்று வெடித்திருப்பது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
நாங்குநேரியில் அண்மையில் வீடு புகுந்து பள்ளி மாணவரும், அவரது தங்கையும் வெட்டப்பட்ட சம்பவம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து மாணவர்களிடையே இன வன்மம், ஆயுத கலாசாரம் தலை தூக்குவதைத் தடுக்க கோரிக்கை விடுத்தோம்.
ஆனால் இது இப்போதும் தொடர்வது வேதனையை அளிக்கிறது. நாங்குநேரி சம்பவத்துக்கு சில நாட்களுக்கு முன்பாக வள்ளியூரில் பெட்ரோல் வெடிகுண்டு தயாரித்து, அதை வெடிக்க வைத்து அதை சிறுவர்கள் காணொலியாக வெளியிட்டுள்ளனர். பின்னர் அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
பாளையங்கோட்டை அரசு உதவிபெறும் பள்ளி ஒன்றில் வகுப்பறையில் கைப்பேசியில் வீடியோ பார்த்த மாணவர்களைக் கண்டித்த ஆசிரியர் இடைநீக்கம் செய்யப்பட்டார். இப்படிப்பட்ட சம்பவங்களின் பின்னணியிலும், குற்றத்தில் ஈடுபட்ட சிலருக்கு ஆதரவாகவும் உள்ளூர் திமுக நிர்வாகிகள் இருந்துள்ளனர்.
சிறுவர்கள் குற்றங்களில் ஈடுபடுவது கவலையடைச் செய்துள்ளது. இச்சம்பவங்களின் பின்னணியில் திமுகவினர் இருப்பதால் முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்கத் தயங்குகிறார். மாணவர்களை சீர்படுத்தவும், குற்றங்களை தடுக்கவும் முயற்சிக்கும் ஆசிரியர்கள் மற்றும் போலீசார் அரசியல் செல்வாக்குக்குப் பயந்து ஒதுங்கிக் கொள்ளும் நிலைமை தமிழகத்தில் நீடிக்கிறது.
ஆயுத கலாசாரத்தை ஒழிக்க முதல்வர் நடவடிக்கை எடுக்க வலியுறுத்துகிறேன் என்று அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.