உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்கள், 1,300 பேரை பதவியிறக்கம் செய்யும் முடிவை கைவிடக்கோரி தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் சங்கத்தினர் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் நேற்று (நவம்பர் 21) கொட்டும் மழையை பொருட்படுத்தாமல் உண்ணாவிரத போராட்டம் நடத்தியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் சங்கத்தின் சார்பில் சென்னை எழும்பூரில் நேற்று (நவம்பர் 21) நடைபெற்ற இந்த உண்ணாவிரதத்தில் மழையையும் பொருட்படுத்தாமல் தலைமை ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
போராட்டம் தொடர்பாக மாநிலத் தலைவர் போ.அன்பரசன் கூறியதாவது:
மேல்நிலைப்பள்ளி முதுநிலை ஆசிரியர் பணியிடத்துக்கு 50 சதவீதம் நேரடி நியமனம் மூலமாகவும், 50 சதவீதம் பட்டதாரி ஆசிரியர் பணியிலிருந்து பதவி உயர்வு மூலமாகவும் நிரப்பப்பட்டு வருகிறது.
பட்டதாரி ஆசிரியர்கள் பணி நிலையில் இருந்து முதுநிலை பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு பெற்றவர்கள் முன்னுரிமை அடிப்படையில் உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியராக பணி மாறுதல் மூலம் நியமனம் பெற்று பணிபுரிந்து வருகின்றனர்.
இதற்கிடையே இந்த பதவி உயர்வை எதிர்த்து ஒரு சில ஆசிரியர்கள் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து வந்த நிலையில் கடந்த மார்ச் 23ம் தேதி பணிமாறுதல் மூலம் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்கியது தவது என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து மேல்முறையீடு செய்தும் பலனளிக்கவில்லை.
அதேபோல பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தும் எந்த பதிலும் கிடைக்கவில்லை. இதனால் கடந்த 2018 ஜனவரி 1 முதல் பதவி உயர்வுபெற்ற உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் சுமார் 1,300 பேரை மீண்டும் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களாக பதவி இறக்கம் செய்ய பள்ளிக்கல்வித்துறை தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. இந்த நடவடிக்கை ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களிடையே பெரும் மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது.
எனவே உயர்நீதிமன்றத்தில் உரிய அனுமதி பெற்று தமிழக அரசு மற்றும் பள்ளிக்கல்வித்துறை உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களை பதவியிறக்கம் செய்யக்கூடாது என்பதற்காக கொள்கை முடிவு எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
தலைமை ஆசிரியர்களின் கோரிக்கையை இந்த விடியாத திமுக அரசு நிறைவேற்றுமா அல்லது பதவியிறக்கம் செய்யுமா என கேள்விக்குறியாகவே உள்ளது. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இப்பிரச்சனையை கண்டுக்கொள்ளவில்லை என்பதே தெரியவருகிறது.