பிரதமர் நரேந்திர மோடி, நடிகை விந்தியா ஆகியோரை விமர்சனம் செய்ததற்காக திமுக கொள்கை பரப்பு துணை செயலர் குடியாத்தம் குமரன் அக்கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
வேலூர் மாவட்டம், குடியாத்தம் பகுதியை சேர்ந்தவர் குமரன். இவர் திமுகவில் கொள்கை பரப்பு துணை செயலாளராக உள்ளார். சில மாதங்களுக்கு முன் நடிகை விந்தியா பற்றி அவதூறாக குமரன் பேசினார். இது சர்ச்சையை ஏற்படுத்தியது. அவர் மீது நடவடிக்கை எடுக்க தேசிய மகளிர் ஆணையம் பரிந்துரை செய்திருந்தது.
இதற்கிடையே உலக கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா தோல்வி அடைந்ததற்கான காரணம் குறித்து குமரன் பேசிய வீடியோவில் பிரதமர் மோடியை அவதூறாக விமர்சித்திருந்தார். இதனை தொடர்ந்து அவர் கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்ட அறிக்கையில், குமரன் கட்டுப்பாட்டை மீறியும் கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையிலும் செயல்பட்டு வந்ததால் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகிறார் என தெரிவித்திருந்தார். ஆனால் அவர் அதில் அவர் பிரதமரை விமர்சித்ததற்காக நீக்கம் என்று குறிப்பிடவில்லை. வழக்கமாக திமுக பேச்சாளர்கள், பெண்களை இழிவாக பேசுவதும் தற்காலிக நீக்கம் செய்யப்படுவதும் பின்னர் சேர்த்துக் கொள்ளப்படுவதும் இயல்பான நடவடிக்கையே. இவர் பிரதமரையும் நாகரீகம் கடந்து விமர்சித்ததால், அதற்காக நீக்கம் செய்யப்பட்டது போன்று ஊடகங்கள் மூலம் திமுக செய்தி பரப்புவதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில் கட்சியை விட்டு நீக்கம் செய்யப்பட்டதை அறிந்த குமரன் பரபரப்பான வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் துரைமுருகனால் திமுகவிற்கு மிகப்பெரிய ஆபத்து வரும். அவர் 60 ஆயிரம் கோடி ரூபாய் வரை மணல் கொள்ளையில் சம்பாதித்துள்ளார் என்று கூறியுள்ளார். இது பொது வெளியில் மிகப்பெரிய புயலை கிளப்பி வருகிறது.