வேலூரில் நாடாளுமன்றத் தேர்தலின்போது சட்டவிரோத பண பரிமாற்றத்தில் ஈடுபட்டது தொடர்பாக விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என அமைச்சர் துரைமுருகன் மகனும், திமுக எம்.பி.யுமான கதிர் ஆனந்திற்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
கடந்த 2019ல் நடந்த தேர்தலில் வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் கதிர் ஆனந்த் போட்டியிட்டார். அப்போது அவருக்கு நெருக்கமானவர்களின் வீடு மற்றும் சிமென்ட் கிடங்குகளில் சோதனை நடத்தப்பட்டதில் ரூ.11.55 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
இப்பணம் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இது பற்றி அமலாக்கத்துறை அதிகாரிகளும் விசாரணை நடத்தினர். அப்போது சட்ட விரோத பண பரிமாற்றம் நடந்ததை வாக்காளர் உறுதி செய்தனர்.
தற்போது வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்த விவகாரம் தொடர்பாக விசாரணையை துவக்கி உள்ளது அமலாக்கத்துறை. திமுக எம்.பி. கதிர் ஆனந்த் விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பி இருப்பதாக அமலாக்கத்துறை வட்டாரங்கள் தகவல் கூறுகின்றன.