பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடு.. திமுக ஊராட்சி மன்றத் தலைவர் மீது மூதாட்டி புகார்!

திருவள்ளூர் மாவட்டத்தில் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தில் வரவேண்டிய பணத்தை வேறு ஒருவருக்கு வழங்கியதாக திமுக ஊராட்சி மன்றத் தலைவர் மற்றும் செயலாளர் மீது மூதாட்டி புகார் அளித்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட பிஞ்சிவாக்கம் ஊராட்சியைச் சேர்ந்தவர் ராமநாதன் மனைவி வசந்தா. கணவனை இழந்த 75 வயது மூதாட்டியான இவருக்கு சர்வே எண் 240ல் காலி மனை இருந்தது. அதில் அரசால் வழங்கப்படும் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வீடு கட்டுவதற்கு கடந்த 2019 டிசம்பரில் விண்ணப்பித்துள்ளார்.

கடம்பத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலக அதிகாரிகள் கட்டுமானப் பணிகள் ஆரம்பித்த போது புகைப்படம் எடுத்துக் கொண்டு சென்றுள்ளனர். ஆனால் அதற்கான உத்திரவாதம் வராமல் இருந்தது. இதனால் உறவினர்களிடம் கடன் வாங்கி வீட்டை கட்டி முடித்துள்ளார்.

இந்த நிலையில் 6 மாதத்திற்கு முன்பு அதே பகுதியில் வேறொருவரின் வீட்டு சுவரில் பயனாளி பெயர் வசந்தா ராமநாதன் என இருப்பதாக அக்கம்பக்கத்தினர் மூதாட்டியிடம் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து கடம்பத்தூர் வட்டார வளர்ச்சி அதிகாரிகளிடம், தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் விண்ணப்பித்து பெற்ற தகவலில் வசந்தா என்பவர் பெயரில் அங்கீகாரம் கிடைத்த நிலையில் அதற்கான தொகை ரூ.1.20 லட்சம் வேறு ஒரு நபரின் வங்கிக் கணக்கில் செலுத்தியுள்ளனர்.

இது தொடர்பாக திமுக ஊராட்சி மன்றத் தலைவரான உமா மணிகண்டனிடம் மூதாட்டி வசந்தாவின் சகோதரர் அமரேசன் சென்று கேட்டபோது, 3 பில்லுக்கான பணம் வேறு நபருக்கு போய்விட்டது. மீதம் உள்ள ரூ.50 ஆயிரத்தை வேண்டுமானால் வாங்கித் தருகிறேன் எனக் கூறியுள்ளார்.

அதே நேரத்தில், உங்கள் விவகாரத்தில் தவறு நிகழ்ந்துவிட்டது. நீங்கள் வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு செல்ல வேண்டாம் என ஊராட்சி செயலர் தெரிவித்துள்ளார்.

ஆனால் அதன் பிறகு இது பற்றி கண்டுகொள்ளாமல் இருந்ததால் நேரில் சென்று கேட்டதற்கு திமுக ஊராட்சி மன்றத் தலைவர் உமா மணிகண்டனும், ஊராட்சி செயலர் சேட்டு என்கிற திருபுராந்தகமும் உங்களால் முடிந்ததை பார்த்துக் கொள்ளுங்கள் எனத் தெரிவித்துள்ளனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த மூதாட்டி இது குறித்து வட்டார வளர்ச்சி அலுவலர், மாவட்ட ஆட்சியர் மற்றும் முதலமைச்சர் தனிப்பிரிவுக்கும் புகார் அனுப்பியுள்ளார்.

விதவைகள் உதவித்தொகை மூலம் கிடைக்கும் பணத்தை வைத்து வாழ்க்கையை நடத்தி வரும் மூதாட்டிக்கு பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வந்த பணத்தை முறைகேடாக ஏமாற்றியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை எழுந்துள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top