ஓட்டு வாங்கவே காவிரி விவகாரத்தில் தி.மு.க., காங்., நாடகம் நடத்துகிறது: அண்ணாமலை குற்றச்சாட்டு!

மயிலாடுதுறை திமுக நிர்வாகிகள், “காங்கிரஸை எதிர்ப்பது போல நாம் நடிக்க வேண்டும். அப்போதுதான் நமக்கு மக்கள் வாக்களிப்பார்கள் என்கின்றனர். தமிழக விவசாயிகளை ஏமாற்றி வாக்கு வாங்க மட்டுமே இவர்கள் காங்கிரஸை எதிர்ப்பது போல நடிக்கப் போகிறார்கள். இது தான் இவர்களுக்கு காவிரியின் மேல் உள்ள கரிசனம் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்:

இன்றைய என் மண் என் மக்கள் பயணம், 300 ஆண்டுகளுக்கு முன்பு சத்ரபதி சிவாஜி மகராஜ் வழி வந்த மராட்டிய மன்னர் சரபோஜி அரசரால் கட்டப்பட்ட காசி விஸ்வநாதர் அருள் பாலிக்கும் ஒரத்தநாட்டில் சிறப்பாக நடந்தேறியது. சத்ரபதி சிவாஜி மகாராஜ் எப்படி முகலாயர்களுக்கு எதிராக போரிட்டு சனாதன தர்மத்தை காப்பாற்றினாரோ, அதே போல அவர் வழிவந்த தமிழக மராட்டிய மன்னர்கள் சனாதனத்தை மேலும் வலுப்படுத்த பக்தர்களுக்குக் கட்டிக்கொடுத்த சத்திரங்களில் மிகப்பெரிய சத்திரம் ஒரத்தநாட்டில் உள்ள முத்தம்மாள் சத்திரம். அதனால்தான் இந்த ஊரை முத்தம்மாள்புரம் என்றும் அழைப்பார்கள்.

1974 ஆம் ஆண்டு, காவிரி நதிநீர் ஒப்பந்தத்தை, அப்போதைய முதல்வராக இருந்த கருணாநிதி புதுப்பிக்கத் தவறியதன் விளைவு, தமிழகத்துக்கு காவிரி நீர் கிடைக்காமல் போனது. தமிழகத்தைச் சேர்ந்த 12 திமுக கூட்டணி அமைச்சர்கள் இருந்தும், மத்திய அரசிதழில், உச்ச நீதிமன்றத் தீர்ப்பை வெளியிடத் தவறியவர் கருணாநிதி. மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள், 2018ஆம் ஆண்டு காவிரி மேலாண்மை வாரியம் அமைத்து கர்நாடக மற்றும் தமிழகத்திற்கு இடையே இருந்த காவிரி நதிநீர் பங்கீடு பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு கண்டார்.

எப்போதெல்லாம் காங்கிரஸ் கர்நாடகாவில் ஆட்சியை பிடிக்கிறதோ, அப்போதெல்லாம் காவிரிக்கு பிரச்சினை ஏற்படுகிறது. மேகதாதுவில் நாங்கள் அணை கட்டுவோம் என காங்கிரஸ் அரசு பிடிவாதம் பிடிக்கிறது.

மயிலாடுதுறை திமுக நிர்வாகிகள், “காங்கிரஸை எதிர்ப்பது போல நாம் நடிக்க வேண்டும். அப்போதுதான் நமக்கு மக்கள் வாக்களிப்பார்கள் என்கின்றனர். தமிழக விவசாயிகளை ஏமாற்றி வாக்கு வாங்க மட்டுமே இவர்கள் காங்கிரஸை எதிர்ப்பது போல நடிக்கப் போகிறார்கள். இது தான் இவர்களுக்கு காவிரியின் மேல் உள்ள கரிசனம்.

இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், ஒரத்தநாடு அருகே வாய்க்காலில் தண்ணீர் வராததால் வயல்களில் வெடிப்பு ஏற்பட்டது. இதனால் நடவு செய்த குறுவை நெற் பயிர்களை காப்பாற்ற விவசாயிகள் குடங்களில் தண்ணீர் பிடித்து வந்து வயல்களில் ஊற்றினர். இதற்கு காரணம் யார்?  இன்று மட்டும் அல்ல, என்றுமே, திமுக மற்றும் காங்கிரஸ் விவசாயிகளின் துரோகிகள்.

ஒரு ஏக்கர் நிலத்தில் 4.2 மெட்ரிக் டன் அளவுக்கு நெல் விளையும் காவேரி என்று பொருநராற்றுப்படை பாடல் கூறுகிறது. இன்று ஒரு ஏக்கர் நிலத்தில் 1.5 முதல் 2 மெட்ரிக் டன் நெல் கிடைத்தால் பெரிதாக உள்ளது. காவிரி நீரை குறித்த நேரத்தில் குறித்த அளவில் பெற்றுத் தராமல் திமுக வஞ்சித்ததன் காரணமாக, டெல்டா மாவட்டங்களில், பல லட்சம் ஏக்கருக்கு, நெல் சாகுபடி பாதிக்கப்பட்டு உள்ளது. சுமார் 3.3 லட்சம் டன் நெல் கொள்முதல் இந்த ஆண்டு குறைந்துள்ளது. இதனால் ரேஷன் அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.

மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு மோடி அவர்கள் ஆட்சியில், நெல்லுக்கு குறைந்தபட்ச ஆதார விலை கடந்த 9 ஆண்டுகளில் 67 சதவீதம் உயர்ந்துள்ளது. வருடம் 6000 ரூபாய் தமிழகத்தில் 46 லட்சம் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. பிரதம மந்திரி கிசான் கடன் அட்டை திட்டத்தின் கீழ் கடந்த 4 ஆண்டுகளில் 18.8 லட்ச கிசான் கடன் அட்டை தமிழக விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. நீர்ப்பாசன மேம்பாட்டிற்கு மத்திய அரசு வழங்கிய நிதி 2,961 கோடி ரூபாய். காவிரி நதியின் மேம்பாட்டிற்கு வழங்கிய நிதி 264 கோடி ரூபாய். சந்தை விலை 3000 ரூபாய் மதிப்புள்ள 45 கிலோ மூட்டை யூரியாவை விவசயிகளுக்கு 242 ரூபாய் மானிய விலைக்கு மத்திய அரசு வழங்குகிறது. தமிழகத்தில் மானிய விலையில் உரம் வாங்கி பயன்பெற்றவர்களின் மொத்த எண்ணிக்கை 27,35,187.

தஞ்சாவூர் மாவட்டத்தை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை பணிகளுக்கு ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு, உதான் திட்டத்தின் கீழ் தஞ்சையில் இருந்து சென்னைக்கு சிறு ரக விமான சேவை, பிரதமரின் வீடு திட்டம், குழாய் குடிநீர், இலவச கழிப்பறைகள், இலவச சமையல் எரிவாயு இணைப்பு, பிரதமரின் மருத்துவ காப்பீடு, முத்ரா கடன் உதவி என லட்சக்கணக்கான தஞ்சாவூர் மக்கள் பலனடைந்துள்ளனர்.

தஞ்சாவூர் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் பாராளுமன்றமே செல்வதில்லை. இவரின் பாராளுமன்ற வருகை வெறும் 48%. ஒட்டுமொத்த பாராளுமன்ற உறுப்பினர்களின் வருகை சராசரி 79%.  
இதுவரை இவர் பாராளுமன்றத்தில் கேட்ட கேள்விகளின் மொத்த எண்ணிக்கை பூஜ்ஜியம். இவர் நிதித்துறையின் மத்திய இணைஅமைச்சராக இருந்தபோது செய்த சாதனை 2ஜி வழக்கில் இருந்த சாட்சிகளை கலைக்க முயற்சித்தது மட்டும்தான்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் மீத்தேன் எரிவாயு திட்டத்திற்கு திமுக காங்கிரஸ் கூட்டணி 2010ஆம் ஆண்டு அனுமதி வழங்கியது. அன்றைய துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் மீத்தேன் திட்ட ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். அப்போதைய பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம். 1996 ஆம் ஆண்டு மத்திய அமைச்சரவையில் மத்திய இணை அமைச்சராக இருந்த போதிலிருந்து இந்த திட்டத்தை தஞ்சை மாவட்டத்தில் செயல்படுத்தவேண்டும் என்று செயல்பட்டவர் டி.ஆர் பாலு. பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததும், வேறு வழியின்றி மீத்தேன் திட்டத்தை எதிர்ப்பது போல நடித்தது திமுக.

விவசாயிகளுக்கு திமுக கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளான, நெல், கரும்புக்கு குறைந்தபட்ச ஆதாரவிலை உயர்வு, தேங்காய் எண்ணெய் மற்றும் கொப்பரை கொள்முதல், விவசாய நிலங்களை ஒப்புதல் இல்லாமல் கையகப்படுத்தமாட்டோம். இப்படி விவசாயிகளுக்குக் கொடுத்த எந்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றாமல் விவசாயிகளை குண்டர் சட்டத்தில் கைது செய்தது, ஒரத்தநாடு, அரசு மருத்துவமனைகள் தரம் உயர்த்தல், திருவோணத்திலும், ஒரத்தநாடு சாமிபட்டியிலும் கால்நடை மருத்துவமனைகள், வடசேரியில் நெல் கொள்முதல் மையங்கள், குளிர்பதனக் கிடங்குகள், திருவோணத்தில் ஆவின் பால் பண்ணை என ஒரு வாக்குறுதியைக் கூட நிறைவேற்றவில்லை. இவ்வாறு அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top