திருத்துறைப்பூண்டியில் கொட்டும் மழையிலும் யாத்திரையில் பங்கேற்ற பொதுமக்கள்: அண்ணாமலை பெருமிதம்!

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதியில் நேற்று (நவம்பர் 29) என் மண், என் மக்கள் யாத்திரைப் பயணம் நடைபெற்றபோது கொட்டும் மழையை பொருட்படுத்தாமல் இறுதி வரை கூட்டம் கலையாமல் பொதுமக்கள் பங்கெடுத்துள்ளதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைத்தளத்தில் கூறியிருப்பதாவது:  

இன்றைய தினம் (நவம்பர் 29) என் மண், என் மக்கள் பயணம், வரலாற்றுச் சிறப்பு மிக்க திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி சட்டசபை தொகுதியில், தொகுதி முன்னேற்றப் பாதையில் செல்ல வேண்டும் என்ற நோக்கத்தில், கொட்டுகின்ற மழையையும் பொருட்படுத்தாமல், இறுதி வரை கூட்டம் கலையாமல் பங்கெடுத்த பொதுமக்களால் சிறப்புற்றது.

திருவாரூர் மாவட்டம் பின்தங்கிய மாவட்டமாக இருக்கிறது. திருத்துறைப்பூண்டி தொகுதி கம்யூனிஸ்ட் கோட்டை என்கிறார்கள். தொகுதியில் தரமான மருத்துவ வசதி, தரமான சாலைகள் இல்லை. காவிரி ஆற்றின் நடுவில் நடப்பது போல, சாலை முழுக்க வெள்ளம் சூழ்ந்து இருக்கிறது. விவசாயம் தொடர்பான எந்த தொழிற்சாலைகளும் இல்லை. இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு, அரசுக் கல்லூரிகள் உள்ளிட்ட எந்த அடிப்படை வசதிகளும் இல்லை. திருத்துறைப்பூண்டி கம்யூனிஸ்ட் கோட்டை அல்ல, கரப்ஷன் கோட்டை. அரசுப் பணத்தைக் கொள்ளையடிப்பவர்கள் நன்றாக இருக்கிறார்களே தவிர வாக்களித்த மக்கள் நன்றாக இல்லை.

2022 நவம்பர் மாதம் தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்தின் வளர்ச்சி குறித்தும் மாநில திட்ட கமிஷன் அறிக்கை வெளியிட்டார்கள். தமிழகத்தில் கடந்த 30 ஆண்டுகளில், சென்னை, கோவை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களே தமிழகத்தின் உற்பத்தி துறையில் 32% பங்களிக்கின்றன. திருவாரூர் மாவட்டம் அந்த அறிக்கையின் படி மிகவும் பின்தங்கி இருக்கிறது. ஒரு சதவீதத்துக்கும் குறைவாக, 0.86 சதவீதம் மட்டுமே திருவாரூரின் வளர்ச்சி இருக்கிறது.

தொழிற்சாலைகளோ இளைஞர்களுக்கான வேலை வாய்ப்புகளோ, மருத்துவம், பொறியியல், உள்ளிட்ட கல்வி நிலையங்களோ இவை எவையும் இல்லையென்றால் எப்படி வளர்ச்சி வரும்? திருவாரூரில் பிறந்தார், திராவிடக் கட்சியே திருவாரூரில்தான் உருவானது, கம்யூனிஸ்டுகளின் கோட்டை என்று சொல்லிச் சொல்லியே அடிப்படை வசதிகளைக் கூட நிறைவேற்றாமல் 70 ஆண்டு காலமாக மக்களை ஏமாற்றி அரசியல் செய்து கொண்டிருக்கிறார்கள். தொடர்ச்சியாக, பொருளாதாரத்தில் பின்தங்கிய தொகுதியாகவே திருத்துறைப்பூண்டி இருந்து வருகிறது.

மாவட்டத்தின் பொருளாதாரம், அடிப்படை கட்டமைப்பு, சுகாதாரம். ஆகியவற்றை வைத்து தீர்மானிக்கப்படும் மனித வளர்ச்சி குறியீட்டில்,  திருவாரூர் மாவட்டத்தின் மனித வளர்ச்சி குறியீடு 0.568 ஆக இருக்கிறது. 70 ஆண்டு காலமாக, வளர்ச்சியைப் பற்றிச் சிந்திக்காமல், திருவாரூர் மாவட்டத்தை கடைநிலையில் வைத்திருக்கிறார்கள்.

மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் ஒன்பதாண்டு கால நல்லாட்சியில், உலகப் பொருளாதாரத்தில் 11 ஆவது இடத்தில் இருந்து 5 ஆவது இடத்துக்கு முன்னேறியிருக்கிறோம். தனிநபர் வருமானம் 90,000 ரூபாயிலிருந்து, 1.86,000 ரூபாயாக உயர்ந்திருக்கிறது. விவசாயப் பெருமக்களுக்காக துணை நின்றிருக்கிறது. நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதார விலை, ரூபாய் 2,183 ஆக, 67% உயர்ந்திருக்கிறது. விவசாயி தோற்றுவிடக் கூடாது என்பதற்காக, தமிழகத்தில் மட்டுமே 46 லட்சம் விவசாயிகளுக்கு, ரூபாய் 2000 வீதம் 15 தவணைகளாக 30,000 ரூபாய் நேரடியாக வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. திமுகவினர் பாஜக உள்ளே வரக் கூடாது என்று சொல்வார்கள். பாஜக உள்ளே வந்தால் மட்டும்தான் வறுமை ஒழியும். ஏற்றத் தாழ்வு இல்லாத சமுதாயம் உருவாகும். ஊழல் இல்லாத அரசு உருவாகும். இளைஞர்களை மையப்படுத்தி அரசியல் நடக்கும். பாஜக உள்ளே வந்தால், ஊழல் துடைத்தெறியப்படும். பாஜக ஆட்சி செய்யும் மாநிலங்கள் எல்லாம், முன்னேற்றப் பாதையிலேயே இருக்கின்றன.

திமுக ஆட்சியிலோ, 4700 கோடி ரூபாய்க்கு மணல் கொள்ளையடித்துவிட்டு, அரசுக்கு வெறும் 37 கோடி மட்டுமே வருமானம் காட்டியிருக்கிறார்கள். திமுக ஆட்சி, மகனுக்கும் மருமகனுக்குமான, ஒரு குடும்ப ஆட்சி. ஏழைகள் ஏழைகளாகவே தொடர்கிறார்கள். திருத்துறைப்பூண்டியில் காவிரி ஆராய்ச்சி மையம், கஜா புயலில் வீடு இழந்தவர்களுக்கு வீடு என ஒரு வாக்குறுதியைக் கூட நிறைவேற்றாமல், 99% தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டோம் என்று பொய் சொல்கிறார் முதலமைச்சர். பொய்யை மட்டுமே மூலதனமாக வைத்து ஆட்சி நடத்தி கொண்டிருக்கிறார்.

இன்றைய அரசியல், வளர்ச்சி, இளைஞர்களுக்கான வாய்ப்புகள், வறுமை ஒழிப்பு, விவசாய மறுமலர்ச்சி இவற்றை மையமாக வைத்தே இருக்க வேண்டும். வரும் பாராளுமன்றத் தேர்தலில், விவசாயிகளின் எதிரியான திமுக அரசை முழுவதுமாகப் புறக்கணிப்போம். விவசாயிகள் நலன் காக்கும் மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களுக்கு, பொதுமக்களின் அன்பும் அரவணைப்பும் ஆதரவும் வழங்கி, தமிழகம் முழுவதும் பாஜக வேட்பாளர்களைத் தேர்ந்தெடுத்து அவர் கரங்களை வலுப்படுத்துவோம். இவ்வாறு அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top