வாக்குறுதி அளித்தபடி கடவுளுக்கு நன்றி தெரிவிக்க கோவிலுக்கு செல்வேன்: சுரங்க நிபுணர் அர்னால்டு டிக்ஸ்!

உத்தகாசி சுரங்கத்தில் சிக்கியவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ள நிலையில் வாக்குறுதி அளித்தபடி கடவுளுக்கு நன்றி தெரிவிக்க கோவிலுக்கு செல்ல உள்ளேன் என சுரங்க நிபுணர் அர்னால்டு டிக்ஸ் தெரிவித்துள்ளார்.

உத்தராகண்ட் மாநிலம், சில்க்யாரா சுரங்கத்தில் கடந்த நவம்பர் 12-ம் தேதி திடீரென மண் சரிந்ததில் 41 தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர். இதனைத் தொடர்ந்து அவர்களை மீட்கும் பணி துரிதமாக நடைபெற்றது.

இதற்காக சர்வதேச சுரங்க நிபுணரும் ஆஸ்திரேலிய பேராசியருமான அர்னால்ட் டிக்ஸ் வரவழைக்கப்பட்டார். அவர் அங்கேயே தங்கியிருந்து மீட்புக் குழுவுக்கு தேவையான ஆலோசனைகளை வழங்கினார். 17 நாட்கள் போராட்டத்துக்குப் பின்னர் 41 தொழிலாளர்களும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

இதற்கிடையே மீட்புப் பணி நடைபெற்றபோது அந்த சுரங்க நுழைவாயிலுக்கு அருகே உள்ள பாபா போக்நாக் கோவிலில் அர்னால்டு டிக் பிரார்த்தனை செய்தார். அப்போது தொழிலாளர்கள் பத்திரமாக மீட்கப்பட வேண்டும் என வேண்டிக் கொண்டார். இவர் வழிபாடு நடத்திய வீடியோ இணையத்தில் வைரலாகியது. அனைவரின் இதயத்தையும் கவர்ந்தார்.

இது தொடர்பாக அர்னால்ட் டிக்ஸ்  கூறியதாவது: மீட்புப் பணியின் ஆரம்பத்தில் இந்த சுரங்கத்தில் சிக்கியவர்கள் கிறிஸ்துமஸ் பண்டிகைக்குள் பத்திரமாக வீடு திரும்புவார்கள் என கூறியிருந்தேன். அவர்களுக்கு கிறிஸ்துமஸ் முன்கூட்டியே பிறந்துவிட்டது.

நாங்கள் அனைவரும் அமைதியாக இருந்தோம், எங்களுக்கு என்ன வேண்டும் என்பது எங்களுக்குத் தெரியும். பொறியாளர்கள், ராணுவம், அரசு அதிகாரிகள் உள்ளிட்டோர் இணைந்து ஒரு அற்புதமான குழுவாக வேலை பார்த்தோம்.

தொழிலாளர்களை பத்திரமாக மீட்டது அதிசயமாக இருந்தது. இக்கட்டான மீட்புப் பணியின்போது நான் வாக்களித்தபடி, கடவுளுக்கு நன்றி சொல்வதற்காக நான் மீண்டும் கோவிலுக்கு செல்வேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top