ஒரு மனிதன் தவறு செய்துள்ளார் என்பதற்காக ஒட்டுமொத்த அமலாக்கத்துறையே தவறு செய்தது என்று சொல்லிவிட முடியாது என, தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தூத்துக்குடி விமான நிலையத்தின் வெளியே செய்தியாளர் சந்திப்பின்போது தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்; நேற்று (டிசம்பர் 1) அமலாக்கத்துறை அதிகாரி ஒருவரை தமிழக லஞ்ச ஒழிப்பு துறை கைது செய்ததைத்தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு காவலுக்கு அனுப்பப்பட்டதாக கூறினார்.
இதுபோன்ற சம்பவம் ராஜஸ்தான், மேற்கு வங்காளம் மற்றும் டெல்லியில் சிபிஐ, அமலாக்கத்துறை போன்ற சிறப்பு நிறுவனங்களில் இருந்து பலர் பிடிபட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.
சமீபத்தில் ராஜஸ்தானில் கூட இதே போன்ற சம்பவம் நடந்துள்ளதாகவும், ஒரு தனிநபரின் குற்றத்திற்காக ஒட்டுமொத்த அமலாக்கத்துறையை குறை சொல்ல முடியாது.
தமிழக காவல்துறையில் யாரோ ஒருவர் தவறு செய்ததற்காக மொத்த காவல்துறையையும் மோசம் என்று சொல்ல முடியாது. எனவே தவறு செய்துள்ள அமலாக்கத்துறை அதிகாரி மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும், அதில் எந்தவித மாற்றுக்கருத்தும் இல்லை.
மேலும் இதனை அரசியலாக பார்க்கக்கூடாது என்றும், ஆனால் இது அரசியல்வாதிகளுக்கு புரியாது என்றும், தமிழக அரசியலில் மெச்சூரிட்டி குறைவான அரசியல்வாதிகளே இருக்கின்றனர். இவ்வாறு அண்ணாமலை கூறினார்.