தெலங்கானா சட்டப்பேரவைத் தேர்தலில் பிஆர்எஸ் தலைவர் கே.சந்திரசேகர ராவ் மற்றும் காங்கிரஸ் தலைவர் ரேவந்த் ரெட்டி இருவரையும் பாஜக வேட்பாளர் வெங்கட ரமண ரெட்டி தோற்கடித்துள்ளார்.
ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், தெலங்கானா மற்றும் மிஸோரம் ஆகிய ஐந்து மாநில சட்டப்பேரவைகளுக்கான தேர்தல் சமீபத்தில் நடைபெற்றது. இன்னும் சில மாதங்களில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதற்கான முன்னோட்டமாக இந்த ஐந்து மாநிலத் தேர்தல்கள் பார்க்கப்படுகின்றன.
இவற்றில் மிஸோரம் மாநிலத்திற்கு மட்டும் வாக்கு எண்ணிக்கை இன்று (டிசம்பர் 4) நடைபெறுகிறது. மற்ற நான்கு மாநில தேர்தல்களில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி நேற்று (டிசம்பர் 3) நடைபெற்றது.
இதில் 119 தொகுதிகளைக் கொண்ட தெலங்கானாவில் பிஆர்எஸ் கட்சியின் தலைவர் கே.சந்திரசேகர ராவ், காமாரெட்டி மற்றும் கஜ்வால் ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டார்.
அதேபோல தெலங்கானா மாநில காங்கிரஸ் தலைவர் ரேவந்த் ரெட்டியும் காமாரெட்டி மற்றும் கோடங்க் ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்டார்.
காங்கிரஸ் மற்றும் பிஆர்எஸ் கட்சிகளுக்கிடையே கடும் போட்டி நிலவிய நிலையில், அக்கட்சிகளின் தலைவர்கள் இருவரும் காமாரெட்டி தொகுதியில் போட்டியிட்டது பரபரப்பாக பார்க்கப்பட்டது.
நேற்று (டிசம்பர் 3) வாக்கு எண்ணிக்கை தொடங்கி நண்பகல் வரை ரேவந்த் ரெட்டி முன்னிலையில் இருந்து வந்தார். சந்திரசேகர ராவ் சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் இரண்டாமிடத்தில் இருந்து வந்தார்.
இந்த நிலையில் திடீரென அவர்கள் இருவரையும் பின்னுக்கு தள்ளி பா.ஜ.க., வேட்பாளர் கே.வெங்கட ரமண ரெட்டி முன்னிலை பெற்றார். தொடர்ந்து முன்னிலை பெற்றுவந்த அவர் 20 சுற்றுகளின் முடிவில் 66,652 வாக்குகள் பெற்று 6,741 வாக்குகள் வித்தியாசத்தில் சந்திரசேகர ராவையும், 11,736 வாக்குகள் வித்தியாசத்தில் ரேவந்த் ரெட்டியையும் வீழ்த்தி வெற்றி பெற்றார்.
தற்போது தெலங்கானா மக்கள் அனைவரும் வெங்கட ரமண ரெட்டியின் வெற்றியை பற்றிதான் பேசி வருகின்றனர். முதலமைச்சராக இருந்த கே.சி.ஆரையும், காங்கிரஸ் கட்சியின் முதல்வர் வேட்பாளராக நிறுத்தப்பட்ட ரேவந்த் ரெட்டி ஆகியோரையும் பா.ஜ.க. வேட்பாளர் வெங்கட ரமண ரெட்டி தோற்கடித்திருப்பதற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.