‘மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய 3 மாநில தேர்தல் வெற்றி அடுத்த ஆண்டு வரவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க., மூன்றாவது முறை வெல்வதற்கான உத்தரவாதம்’ என பிரதமர் நரேந்திர மோடி பேசினார். மேலும் ‘இது மத்திய அரசின் தற்சார்பு இந்தியா செயலாகத்திற்குக் கிடைத்த வெற்றி’ எனவும் அவர் குறிப்பிட்டார்.
மூன்று மாநிலங்களில் அமோக வெற்றி பெற்றதைத் தொடர்ந்து தில்லி பாஜக தலைமை அலுவலகத்தில் நேற்று மாலை ( 03.11.2023 ) வெற்றி விழா நடைபெற்றது. விழாவிற்கு வருகை தந்த பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
விழாவில் அகில பாரதத் தலைவர் ஜெபி நட்டா, அமித்ஷா, ராஜ்நாத் சிங் உட்பட்ட தில்லியை சார்ந்த தலைவர்கள் கலந்து கொண்டனர். அப்போது தொண்டர்கள் மத்தியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டதாவது;
வளர்ந்த நாடாக நமது பாரதத்தை உருவாக்குவதற்கான பா.ஜ.க., அரசின் தீர்மானங்களுக்கு மக்கள் ஆதரவு பெருகியிருப்பதையே இந்த வெற்றி காட்டுகிறது.
சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் பாரதத்தின் மீதான உலகின் நம்பிக்கையை உறுதிப்படுத்தும் என்பதோடு, நாட்டுக்கான சர்வதேச முதலீட்டாளர்கள் மத்தியிலும் நம்பிக்கையை அதிகரிக்கச் செய்யும்.
வலுவான பெரும்பான்மையுடன் நிலையான அரசு அமைவதற்காக மக்கள் வாக்களித்து வருவதை உலக நாடுகள் கவனித்து வருகின்றன. சுயநல அரசியலுக்கும் தேச நலன் சார்ந்த அரசியலுக்கும் இடையேயான வித்தியாசத்தை மக்கள் உணர்ந்துள்ளனர். நாட்டின் வளர்ச்சிக்கும் ஒவ்வொரு குடும்பத்தின் மேம்பாட்டுக்கும் வலுவான பா.ஜ.க., தலைமை தேவை என்பதையும் அவர்கள் உணர்த்தியுள்ளனர்.
நம்மைப் பொறுத்தவரை ஜாதிகள் நாங்கிதான். பெண்கள், இளைஞர்கள், ஏழைகள், விவசாயிகள் என்ற 4 பிரிவினர் தான் அவர்கள். அவர்களின் வாழ்வை மேம்படுத்துவதே, நாட்டின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும். இவர்களின் கனவுகளை நிறைவேற்றுவதுதான் எனது கடமை.
இந்த தேர்தல் முடிவுகள் மூலமாக, காங்கிரஸ் மற்றும் ‘இ.ண்.டி.’ எதிரணியினருக்கு தக்க பாடத்தை மக்கள் புகட்டியுள்ளனர். மத்திய அரசின் வளர்ச்சிக்கும் மக்களுக்கும் இடையே யாரும் வர முடியாது. அவ்வாறு வந்தால், மக்கள் அவர்ளை நீக்கிவிடுவர் என்பதை தேர்தல் முடிவுகள் காண்பித்துள்ளது.
‘3 மாநில தேர்தல் வெற்றி, 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க., மூன்றாவது முறை வெற்றி பெறுவதற்கான உத்தரவாதம்’ என்று சிலர் இப்போதே பேசத் தொடங்கிவிட்டனர். எனவே சிறந்த நிர்வாகத்தையும், வளர்ச்சியை அளிக்கும் அரசியுலுடன் மக்கள் உறுதியாக இருப்பதை சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.
மேலும் இது தொடர்பாக தனது எக்ஸ் வலைத்தள பதிவில், ‘பா.ஜ.க., மீதான மக்களின் நம்பிக்கைக்கு தலைவணங்குகிறோம். சிறந்த நிர்வாகத்தை, வளர்ச்சியை அளிக்கும் அரசியலுடன் மக்கள் உறுதியாக துணை நிற்பதை சத்தீஸ்கர், மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. மக்களின் ஆதரவுக்கு நன்றி.
தேர்தலில் கடினமாக உழைத்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். தேர்தலில் இவர்கள் ஓய்வின்றி பணியாற்றி, பா.ஜ.க.வின் வளர்ச்சித் திட்டங்கள் குறித்த தீர்மானங்களை மக்களிடையே கொண்டு சேர்த்தனர் என்று குறிப்பிட்டிருந்தார்.
மேலும் மற்றொரு பதிவில், தெலங்கானா சட்டப்பேரவைத் தேர்தலில் பா.ஜ.க.வுக்கு ஆதரவளித்த சகோதரர், சகோதரிகளுக்கு நன்றி. மாநிலத்தில் கடந்த சில ஆண்டுகளில் பாஜகவுக்கான ஆதரவு அதிகரித்துள்ளது. இதே நிலை வரும் ஆண்டுகளிலும் தொடரும் என்ற நம்பிக்கை உள்ளது. தெலங்கானாவுடனான பாஜகவின் உறவு பிரிக்க முடியாதது. மாநில மக்களின் நலனுக்காக பாஜக தொடர்ந்து பணியாற்றும் என்று பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டிருந்தார்.