பிரதமர் நரேந்திர மோடியின் முகம் மற்றும் அவரது தேர்தல் வாக்குறுதிகளை மட்டுமே நம்பி சத்தீஸ்கரில் பா.ஜ.க., களம் இறங்கி சிறந்த வெற்றியை பதிவு செய்துள்ளது.
கடந்த 2018 சட்டசபை தேர்தலில் மொத்தமுள்ள 90 தொகுதிகளில் 68 தொகுதிகளை காங்கிரஸ் பிடித்து ஆட்சி அமைத்தது. பா.ஜ.க., 15 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்று இரண்டாவது இடம் பிடித்திருந்தது.
கடந்த 2012க்கு பின் ஆட்சியில் உள்ள மாநிலங்களில் மக்கள் அதிருப்தி காரணமாக காங்கிரஸ் மீண்டும் ஆட்சியை பிடித்ததில்லை. ஆனாலும் சத்தீஸ்கரில் காங்கிரஸ் மீண்டும் வெற்றி பெற்றுவிடும் என அக்கட்சியினர் நம்பியிருந்தனர்.
இம்முறை, சத்தீஸ்கரில் கடந்த நவம்பர் மாதம் 7 மற்றும் 17ம் தேதிகளில் இரு கட்டங்களாக நடந்த தேர்தல் நடைபெற்றது. சத்தீஸ்கரில் காங்கிரஸ் முதல்வர் பூபேஷ் பாகேல் அசைக்க முடியாத தலைவராக பார்க்கப்பட்டார். பா.ஜ.க., பிரதமர் மோடியை முன்னிறுத்தி தேர்தல் பிரசாரத்தை தொடங்கியது.
இந்த தேர்தலில் பிரதமர் மோடியின் முகம் மற்றும் அவரது தேர்தல் வாக்குறுதிகளை மட்டுமே நம்பி பா.ஜ.க., களம் கண்டது. தேர்தல் நேரத்தில், மகாதேவ் எனும் சூதாட்ட செயலி விவகாரத்தில் பூபேஷ் பாகேல் ரூ.500 கோடி வாங்கியது அக்கட்சிக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தியது.
பழங்குடியினர் பெரும்பான்மை வகிக்கும் தெற்கு சத்தீஸ்கரில் நிகழ்ந்த சட்டவிரோத மதமாற்ற விவகாரத்தை காங்கிரஸ் பெரிதாக கண்டு கொள்ளவில்லை.
இது பழங்குடியினர் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. கடந்த 2018 சட்டசபை தேர்தலில், தெற்கு மற்றும் வடக்கு சத்தீஸ்கரில் பழங்குடியினர் ஆதரவு முழுமையாக காங்கிரசுக்கு கிடைத்ததால் அக்கட்சி சுலபமாக வெற்றி பெற முடிந்தது. இந்த முறை அந்த பகுதியினர் வாக்குகள் முழுமையாக பா.ஜ.க.,வுக்கு கிடைத்தது.
இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர் பெரும்பான்மை வகிக்கும் இந்த மாநிலத்தில், காங்கிரசின் ஜாதிவாரி கணக்கெடுப்பு வாக்குறுதியை மக்கள் நிராகரித்தனர். முதல்வர் பதவியை பெறுவதற்கு காங்கிரஸ் மூத்த தலைவரான சிங் தியோவுக்கும், பூபேஷ் பாகேலுக்கும் இடையே தொடர்ந்து நடந்து வந்த கோஷ்டி மோதலும், கட்சியின் வீழ்ச்சிக்கு வழி வகுத்தது.
மிக எளிதாக வெற்றி பெற்று விடுவோம் என, காங்கிரஸ் கட்சி திடமாக நம்பிய சத்தீஸ்கரில் அக்கட்சி எதிர்பாராத விதமாக தோல்வியை தழுவியது. பா.ஜ.க.,வின் தளராத முயற்சியும், பிரதமர் மோடியின் உத்தரவாதமுமே வெற்றிக்கு வழிவகுத்ததாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.
இது பற்றி சத்தீஸ்கர் பா.ஜ.க., முன்னாள் முதல்வர் ரமண் சிங் கூறுகையில்;
பூபேஷ் பாகேல் அரசின் ஊழல் ஆட்சி மீது மக்களுக்கு வெறுப்பு ஏற்பட்டது. அவர்கள் மாற்றத்தை விரும்புகின்றனர் என்பதை பிரசாரத்தின் போதே உணர முடிந்தது. பிரதமர் நரேந்திர மோடியின் உத்தரவாதம் மீது மக்கள் நம்பிக்கை வைத்து வெற்றி பெற செய்துள்ளனர். எம்.எல்.ஏ.,க்கள் ஒன்றுகூடி அடுத்த முதல்வரை தேர்ந்தெடுப்பார்கள். இவ்வாறு அவர் கூறினார்.