மோடியின் மீது நம்பிக்கை.. சனாதனத்தால் பா.ஜ.க.விற்கு கிடைத்த வெற்றி: மாநில தலைவர் அண்ணாமலை!

பிரதமர் நரேந்திர மோடியின் மீது உள்ள நம்பிக்கை மற்றும் சனாதன பிரச்சாரமும் தான் வடமாநில தேர்தல்களில் பாஜகவிற்கு வெற்றி பெற்றுத் தந்துள்ளதாக மாநில தலைவர் அண்ணாமலை கன்னியாகுமரியில் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறினார்.

டிசம்பர் 3ம் தேதி வெளியான நான்கு மாநில தேர்தல் முடிவுகள் பற்றி கன்னியாகுமரி மாவட்ட பாஜக அலுவலகத்தில், மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது பேசிய அவர், ‘‘பாஜகவுக்கு இன்று (நேற்று) அற்புதமான நாள் இன்று 5 மாநிலத்தில் தேர்தல்களில் 4 மாநில தேர்தலில் முடிவுகள் வந்துள்ளன.

அதில் மூன்று மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்று வரலாறு படைத்துள்ளது. அதே நேரத்தில் தெலங்கானாவிலும் பெரிய வெற்றியை பதிவு செய்துள்ளது. அதேபோன்று மத்தியப் பிரதேசத்தில் 166 எம்.எல்.ஏ-க்களுடன் வெற்றி பெற்றுள்ளோம். 2003-ல் இருந்தே, 18 ஆண்டுகளாக ஆட்சி செய்து வருகிறோம். இடையில் 15 மாதங்கள் மட்டுமே காங்கிரஸ் ஆட்சி இருந்தது.

சத்தீஸ்கரில் கடந்த முறை பாஜகவில்  இருந்து 15 எம்.எல்.ஏ-க்கள் வெற்றி பெற்றிருந்தார்கள். தற்போது 56 எம்.எல்.ஏ-க்களுடன் ஆட்சி அமைக்கிறோம். ராஜஸ்தானைப் பொருத்தவரை 115 எம்.எல் ஏ-க்களுடன் ஆட்சி அமைக்கிறோம். தெலங்கானாவில் 2018ம் ஆண்டு ஒரு எம்.எல்.ஏ இருந்த நிலையில், தற்போது 8 எம்.எல்.ஏ-க்கள் வெற்றி பெற்று உள்ளார்கள்.

இது 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கான முன்னோட்டம் தான் இது.  இ.ண்.டி. கூட்டணிக்குப் பிறகு நடந்த முதல் தேர்தல் இது. அவர்கள் தேர்தலின் போது ஒ.பி.சி சமூகத்துக்கு முன்னுரிமை,  இலவச திட்டங்கள் என்பது போன்ற பல பிரசாரங்களை  மக்களிடம் முன் வைத்தனர். ஆனால் அவை எடுபடவில்லை..

நாம் மாநிலங்களில் முதலமைச்சர் வேட்பாளரை முன்னிலை படுத்தாமல் கட்சியை மட்டும் முன்னிலைப்படுத்தி பிரதமர் நரேந்திர மோடி மீது மக்கள் வைத்த நம்பிக்கையின் மூலம் வெற்றி பெற்று உள்ளோம். குறிப்பாக தெலங்கானாவில் கம்மாரெட்டி தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ், பி.ஆர்.எஸ். கட்சியின் முதலமைச்சர் வேட்பாளர்களை தோற்கடித்து உள்ளோம்.

தெலங்கானாவில் பாஜக 8 இடத்தில் வென்றிருந்தாலும் பல இடங்களில்  காங்கிரஸ், பி.ஆர்.எஸ் கட்சிகளில் யார் வெற்றி பெறுவார்கள் என்பதை நாம் தான்  தீர்மானித்துள்ளோம். இது கட்சிக்கு இரண்டாம் கட்ட வளர்ச்சி ஆகும். இந்நிலை தொடரும் போது 2028 தேர்தலில் தெலங்கானாவில் பாஜக ஆட்சி அமைக்கும். 

சனாதனம் பிரசாரம் வட மாநிலங்களில் எடுபட்டதாகச் சொல்கிறார்கள். ஆட்சி போனாலும் பரவாயில்லை சனாதன தர்மத்தை ஒழிப்பது தான் முக்கியம் என உதயநிதி கூறினார். மோடி மீது உள்ள நம்பிக்கை மற்றும் சனாதன பிரசாரமும் வடமாநில தேர்தலில் பாஜக-வுக்கு வெற்றியை கொடுத்துள்ளன.

1998ம் ஆண்டு என்.டி.ஏ கூட்டணி ஆரம்பித்தார்கள். அந்தக் கூட்டணி அப்படியே தான் உள்ளது. மோடியை பிரதமராக ஏற்றுக் கொண்டு வர கூடியவர்கள் வரலாம். இந்தத் தேர்தல் குடும்ப அரசியலுக்கு எச்சரிக்கை மணி அடித்து உள்ளது மக்களை ஒரு முறை இரண்டு முறை பொய் சொல்லி ஏமாற்றலாம் எப்போதும் ஏமாற்ற முடியாது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top