மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை மக்களுக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று (டிசம்பர் 6) நிவாரண உதவிகளை வழங்கினார்.
சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட, மாவட்டங்களை கடந்த சில நாட்களாக புரட்டிப்போட்ட மிக்ஜாம் புயல் நேற்று மாலை ஆந்திர மாநிலம், பாபட்லா அருகே 110 கி.மீ. வேகத்தில் கரையைக் கடந்தது.
சென்னை சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழை, வெள்ளம் ஓய்ந்தாலும் இன்னும் பல்வேறு பகுதிகளில் வெள்ள நீர் வடியாததால் மக்கள் முடங்கியுள்ளனர். அத்தியாவசிய தேவையான குடிநீர், உணவு, பால், மின்சாரம் உள்ளிட்டவை இல்லாமல் மிகப்பெரிய இன்னலுக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
வேளச்சேரி, பள்ளிக்கரணை, வியாசர்பாடி, வண்ணாரப்பேட்டை, ஒக்கியம் துரைப்பாக்கம், செங்கல்பட்டு மாவட்டத்தில் மேற்கு தாம்பரம் ஆகிய பகுதிகளில் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை வேளச்சேரியில் இன்னும் மழை வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் தனியார் படகுகள் மூலம் மக்கள் வெளியேறி வருகின்றனர். குடிதண்ணீர், பால், உணவு போன்ற அத்தியாவசியப் பொருட்களைப் பெற முடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர்.
மேலும் இந்தப் பகுதியில் மின்சாரம், செல்போன் சேவை இன்னும் கிடைக்கவில்லை. ஒருசில பகுதிகளில் ஹெலிகாப்டர் மூலம் உணவுப் பொட்டலங்களை வழங்கும் பணியை ராணுவம் மேற்கொண்டுள்ளது.புயல் கரையை கடந்த ஆந்திராவில் கூட அனைத்து பகுதிகளுக்கும், மின்சாரம் மற்றும் அடிப்படை தேவைகளான பொருட்கள் கிடைத்துவிட்டது. ஆனால் இந்த விடியாத திமுக அரசால் எவ்வித பொருட்களும் கிடைக்காமல் மக்கள் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
இதனை உணர்ந்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பாதிப்பில் இருப்பவர்களுக்கு பல்வேறு உதவிகளை வழங்கும்படி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு உத்தரவிட்டிருந்தார். அதன்படி சென்னை முழுவதும் பாஜக நிர்வாகிகள் பம்பரம் போன்று சுழன்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான பொருட்களை வழங்கி வருகின்றனர்.
இந்த நிலையில், பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை 4வது பிரதான சாலை, சென்னை கிழக்கு வேளச்சேரியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு பாதித்த மக்களுக்கு உணவுப் பொட்டலங்களை வழங்கி அவர்களின் குறைகளை கேட்டறிந்தார்.
மேலும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தி.நகர், ஆயிரம் விளக்கு, எக்மோர், ராயபுரம் ஆர்.கே.நகர், வடசென்னை, தென் சென்னை, உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மக்களை சந்தித்து நேரடியாக நிவாரண பொருட்கள் மற்றும் உணவுகளையும் வழங்கினார்.
நிவாரண பொருட்களை வழங்கிய பின்னர் மக்களிடம் அவர் பேசியதாவது:
நாம் அனைவரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள். மக்களுக்கு தேவையான அரிசி, பருப்பு, சோப்பு, பெட்ஷீட், பாய், குடிநீர், காய்கறிகள் உள்ளிட்டவை வழங்க வந்துள்ளோம். பிரதமர் மோடி ஐயா உங்களுடன் உள்ளார். மாணவர்களின் படிப்பு பாதிக்கப்பட்டுள்ளது. இருந்தபோதும் படிப்பதை நிறுத்த வேண்டாம். படிப்பை தொடர்ந்து கொண்டே இருக்க வேண்டும். பெற்றோர்களின் வாழ்க்கை ஒரு வாரத்தில் இயல்பு நிலைக்கு திரும்பி விடும்.
இந்த நேரத்தில் காவல்துறை நண்பர்களுக்கும் நாம் பாராட்டுக்களை தெரிவிக்க வேண்டும். அவர்கள் தொடர்ந்து நமக்காக பணியாற்றி வருகின்றனர். உங்கள் அனுமதியுடன் வேறு இடத்திற்கு செல்கிறேன். மற்ற இடத்திலும் பொதுமக்கள் காத்திருப்பார்கள். நன்றி மீண்டும் இந்த பகுதிக்கு வந்து பார்வையிடுவேன். இவ்வாறு அவர் கூறினார்.