மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட சென்னை மக்களுக்கு நிவாரண உதவி வழங்கும்படி பாஜக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு மாநிலத் தலைவர் அண்ணாமலை வேண்டுகோள் விடுத்திருந்தார்.
அதன்படி தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, கோவா உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள பாஜகவினர் நிவாரண பொருட்களை அனுப்பி வருகின்றனர். அந்த வகையில் அனுப்பப்படும் நிவாரண பொருட்கள் சென்னை பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்திற்கு இன்று வந்து சேர்ந்தன.
அது மட்டுமல்லாது பாதிக்கப்படாத தமிழகத்தின் இதர மாவட்டங்களில் இருந்தும் கமலாலயத்திற்கு நிவாரண பொருட்கள் வந்து குவிந்து கொண்டிருக்கின்றன.
அதனை பொதுமக்களுக்கு வழங்குவதற்கான பணிகளில் நிர்வாகிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
இது தொடர்பாக தமிழக பாஜகவின் எக்ஸ் வலைத்தளப்பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:
மிக்ஜம் புயலால் பாதிக்கப்பட்ட சென்னை மக்களுக்கு நிவாரண உதவி வழங்க வேண்டும் என்று நமது மாநிலத் தலைவர் திரு அண்ணாமலை அவர்களின் கோரிக்கையை ஏற்று தமிழ்நாடு பாஜக அனைத்து அனைத்து மாவட்டங்களில் இருந்தும் பெறப்பட்ட நிவாரண பொருட்கள், பொதுமக்களுக்கு வழங்குவதற்கு நமது கட்சியின் தலைமை அலுவலகத்தில் தயார் நிலையில் உள்ளன.
சென்னை மக்களுக்கு உதவிட நிவாரண பொருட்களை அனுப்பிய அனைத்து மாவட்ட தலைவர்களுக்கும் பாஜக தொண்டர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.
சென்னையில் வெள்ளம் பாதிக்கபட்ட பகுதிகளில் இன்று இந்த நிவாரண பொருட்கள் நமது கட்சி தொண்டர்களால் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.