சென்னை பேரழிவிற்கு பின், இனியாவது ஊழல் தி.மு.க., அரசு உண்மையை பேசுமா? பா.ஜ.க., தலைவர் அண்ணாமலை!

சென்னையில் ஏற்படுத்திய மிக்ஜாம் பேரழிவிற்கு பின், இனியாவது ஊழல் திமுக அரசு உண்மையை பேசுமா என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டை பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நேற்று (டிசம்பர் 8) பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆய்வு செய்தார். அங்குள்ள தொழில் அதிபர்கள் மற்றும் நிர்வாகிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்.

அதன் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழக மக்களுக்கு சகிப்பு தன்மை அதிகம். இந்த முறை வெள்ள பாதிப்பின்போது சென்னை மக்களுக்கு கோபம் வெளிவந்துள்ளது. பாதிப்புகள் கடுமையாக இருந்தபோது எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள், மக்கள் பிரதிநிதிகள் களத்தில் இல்லை. ஆளும் கட்சி தொண்டர்கள் களத்துக்கு வந்திருக்க வேண்டும். தங்களது கோட்டை என்று சொல்லக்கூடிய சென்னை பாதிக்கப்படும் போது களத்தில் திமுகவினர் வராதது மக்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. வெள்ள பாதிப்பின் போது போர்க்கால அடிப்படையில் திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.

கூலித் தொழிலாளர்கள், முகம் தெரியாத இளைஞர்கள் தான் அதிக எண்ணிக்கையில் களத்தில் உள்ளனர். வெள்ள பாதிப்பு குறித்து அறிக்கை தயாரித்து கட்சித் தலைமைக்கு அனுப்ப முடிவு செய்துள்ளோம் என்றார்.

அதே போன்று தனது எக்ஸ்பதிவில் அவர் கூறியிருப்பதாவது:

மிக்ஜாம் புயலால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள அம்பத்தூர் தொழிற்பேட்டை பகுதியில் தமிழக பாஜக சார்பாக தொழில் முனைவோர்களை இன்று சந்தித்தோம்.

5 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகள் வழங்கிவரும் சென்னையின் தொழிற்துறை மையமாக விளங்கும் இப்பகுதியில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் சரியாக இரண்டு மாதங்கள் வரை ஆகும் என கூறப்படும் நிலையில் இன்று வரை திமுக அமைச்சர்கள் வராமல் இருப்பது ஊழல் திமுக அரசின் உண்மை முகத்தை காட்டுகிறது.

கடன் வாங்கி தொழில் செய்து வரும் உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள்  தங்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளை கூறியதோடு, தங்கள் கோரிக்கைகளையும் முன்வைத்தனர். நாளை தமிழகம் வரவிருக்கும் மத்திய இணை அமைச்சர் திரு ராஜீவ் சந்திரசேகர் அவர்களிடம், கோரிக்கை மனுக்களை வழங்க ஏற்பாடுகள் செய்துள்ளோம். இவ்வாறு அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top