திராவிட ஆட்சியில் சென்னையை சுற்றி இருந்த ஏரிகள் அனைத்தும் காணவில்லை என பா.ம.க., தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழக அரசு இன்னும் விரைந்து செயல்பட வேண்டும். ஆங்காங்கே வேலை செய்து கொண்டுள்ளனர். ஆனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். பல முறை அரசுக்கு சொல்லியும் அதனை அரசு பெரிதுபடுத்தவில்லை. எங்களுடைய நோக்கமே மக்கள் வளர்ச்சி தான்.
சென்னை சுற்றி உள்ள ஏரிகள் திராவிட ஆட்சி காலத்தில் காணாமல் போய்விட்டது. அதன் மேல் தான் கட்டுமான பணிகளை மேற்கொண்டுள்ளனர். குடியிருப்புகள், ஆக்கிரமிப்புகள் நடந்துள்ளன. சென்னை புறநகர் பகுதிகளில் அதிகாரிகள் லஞ்சம் வாங்கிக் கொண்டு கட்டடம் கட்டுவதற்கு அனுமதி அளித்தனர். இதனால் தான் வீட்டிற்குள் தண்ணீர் வந்துள்ளது. வடிகாலும் பராமரிப்பு இல்லாத காரணத்தினால் இன்று மிகப்பெரிய வெள்ளத்தில் சென்னை மிதக்கிறது. அடுத்த 5 அல்லது 6 ஆண்டுகளில் பெரிய வெள்ளம் வரும். அததன தொடர்ந்த அடுத்த 3 ஆண்டுகளில் மீண்டும் மிகப்பெரிய வெள்ளம் வரும். முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை எனில் அரசின் தோல்வியாக பார்க்கப்படும்.
சென்னையை சுற்றி 100 கிலோ மீட்டர் பரப்பளவில் 10 ஏரிகளை அமைக்க வேண்டும். ஒவ்வொரு ஏரியும் 1 டிஎம்சி கொள்ளளவு கொண்ட ஏரியாக இருக்க வேண்டும். திண்டிவனம், காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர், மதுராந்தகம், கும்மிடிபூண்டி பகுதிகளில் ஏரியை உருவாக்க வேண்டும். மன்னராட்சியில் தான் உருவாக்க வேண்டுமா, மக்களாட்சியில் செய்யக்கூடாதா? அப்படி ஏதும் உள்ளதா? இங்கு உள்ள வெள்ள நீரை கால்வாய் மூலம் அங்கு அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு அன்புமணி கூறினார்.
ஒரு மாதத்திற்கு முன்புதான் இதே அன்புமணி ஶ்ரீரங்கம் பெரியார் சிலை அகற்றப்படும் என்று கூறிய அண்ணாமலையை கண்டித்து அறிக்கை விட்டிருந்தார். தற்போது ‘ திராவிட ஆட்சி ‘ என்கிறார். எப்போது இவர் திராவிடத்திற்கு எதிரானவர் என்று அரசியல் நோக்கர்கள் கேள்வி எழுப்புகின்றனர் .