மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட தென்சென்னையின் முக்கியமான பகுதிகளான பள்ளிக்கரணை, மடிப்பாக்கம், வேளச்சேரியில் வெள்ள நீர்சூழ்ந்ததால் மக்கள் மிகப்பெரிய துயரத்திற்கு தள்ளப்பட்டனர்.
வேளச்சேரி ராம்நகர் 6-வது தெரு, விஜயநகர் 11,12,13- வது தெருக்களில் இடுப்பளவு மழை வெள்ளநீர் தேங்கியது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் அடிப்படை தேவைகளாக குடிநீர், உணவு, பால் உள்ளிட்டவை கிடைக்காமல் அவதியுற்றனர். அவர்களின் நிலையை கண்டு வராமல் வீட்டுக்கு ஒளிந்து கொண்டவர்தான் அத்தொகுதியின் காங்கிரஸ் எம்.எல்.ஏ., ஹசன் மவுலானா.
மீட்பு பணி தொடங்கிய நாளில், யுடியூபர் ஒருவரின் கேள்விக்கு வேளச்சேரி காங்கிரஸ் எம்.எல்.ஏ., ஹசன் மவுலானா பேசிய பேட்டியால் பொதுமக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. ‘‘இயற்கை பேரிடர் நடக்கும்போது இதெல்லாம் சர்வசாதாரணமான விஷயம். இதை நாம் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். வேளச்சேரி ஏரியின் உயரம் அதிகரிக்கும்போது ஊருக்குள் தண்ணீர் வரத்தான் செய்யும். அதனை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். நிவாரண பணிகளை பொறுத்தவரை அதிகபட்சமாக இதுதான் பண்ண முடியும். தண்ணீர் கடலுக்கு செல்ல வேண்டும். கடல் உள்வாங்கலைனா நாம என்ன பண்ண முடியும். இதற்கு மேல் எதுவும் செய்ய முடியாது’’ என தெரிவித்தார். அவரது அலட்சிய பேச்சு தொகுதி மக்களிடையே அதிர்வலையை ஏற்படுத்தியது.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு எதுவுமே செய்யவில்லை என்றால் கூட பரவாயில்லை. சும்மா தேவையில்லாம பேசி மக்களின் கோபத்திற்கு ஆளானார்.
எதாச்சையாக வேளச்சேரி பக்கம் சென்ற ஹசன் மவுலானாவை மக்கள் சூழ்ந்துக்கொண்டு சரமாரி கேள்வி எழுப்பினர். இத்தனை நாளா தண்ணீரில் மிதந்துக் கொண்டிருந்தோம் அப்போது வரமால் சாலையில் தண்ணீர் வடிந்த பின்னர் எதற்கு வந்தீர்கள் என ஒருமையில் கேள்வி எழுப்பினர்.
இதனால் மக்களுக்கும், காங்கிரஸ் எம்.எல்.ஏ.வின் ஆதரவாளர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தொடர்ந்து ஹசன் மவுலானா காரில் ஏறி தப்பியோட முயற்சித்தார். ஆனால் மக்கள் காரை சுற்றி சூழ்ந்து கொண்டபோது எதிர்க்கட்சிக்காரர்கள் தூண்டிவிட்டு செய்றீங்களா என்றார்.
ஆனால் அப்போது ‘‘நான் ஒரு ஐடி ஊழியர், எந்த கட்சியும் சார்ந்தவர் அல்ல’’ என ஒரு பெண் கூறினார். அவரை காங்கிரஸ் மற்றும் திமுகவினர் ஒருமையில் பேச முயற்சித்த நிலையில், பொதுமக்கள் ஆவேசமடைந்ததால் அங்கிருந்து காங்கிரஸ் எம்.எல்.ஏ., மற்றும் அவரது ஆதரவாளர்கள் ஓட்டம் பிடித்தனர். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.