நாடாளுமன்றத்தில் இன்று அவை நடந்து கொண்டிருக்கும்போது இருவர் அத்துமீறி உள்ளே நுழைந்து கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். அவர்களை டெல்லி காவல்துறை உடனடியாக கைது செய்தனர். நடந்த இந்த சம்பவம் துரதிஷ்டவசமானது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் தமிழகத்தின் தனியார் செய்தி சேனல் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது
நல்ல வேளை, மாண்புமிகு உறுப்பினர்களுக்கு எதுவும் நடைபெறவில்லை. இதற்காக நான் ஆண்டவனுக்கு நன்றி சொல்கிறேன். நமது ஜனநாயகத்தின் மையப்பகுதியான நாடாளுமன்றத்தில் நடைபெற்றிருப்பது துரதிருஷ்டமான சம்பவம்.
இது நிச்சயமாக பாதுகாப்பு குறைபாடுதான். அதில் எந்தவித மாற்றுக்கருத்தும் இல்லை. நமது நாடாளுமன்றத்தை பொறுத்தவரையில் 5 அடுக்கு பாதுகாப்பு உள்ளது. அதை தாண்டிதான் ஒருவர் உள்ளே செல்ல முடியும்.
அதையும் தாண்டி இரண்டு பேர் உள்ளே வந்திருக்காங்க. அவர்கள் கையில் கேஷ் கேன்டில் எப்படி வந்தது என்பது முதல் கேள்வியாக இருக்கிறது. இதற்குப் பின்னணியில் யார் இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இது பற்றி டெல்லி காவல்துறையும், நாடாளுமன்ற பாதுகாப்பு அதிகாரிகளும் விசாரணை நடத்துவார்கள். இரண்டு அல்லது மூன்று நாட்களில் விரிவான தகவல்கள் தெரிந்துவிடும். இவ்வாறு அவர் கூறினார்.