சென்னை: மழை வெள்ளத்தில் சிக்கிய 3,500 பேரை பாதுகாப்பாக மீட்ட முப்படை!

சென்னையில் மிக்ஜாம் புயல் காரணமாக கனமழை கொட்டித் தீர்த்த நிலையில் மழை வெள்ள மீட்பு பணிகளில் ராணுவம், கடற்படை, விமானப்படை வீரர்கள் தங்களின் உயிர்களை பணயம் வைத்து 3,500க்கும் மேற்பட்டோர்களை பத்திரமாக மீட்டுள்ளனர். இதற்காக  அவர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

கடந்த டிசம்பர் 4 தேதி மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் கனமழை பெய்தது. இதனால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் வெள்ளத்தில் தத்தளித்தது. குறிப்பாக முகலிவாக்கம், மணப்பாக்கம், மடிப்பாக்கம், பள்ளிக்கரணை, வேளச்சேரி, பெரும்பாக்கம், செம்மஞ்சேரி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள குடியிருப்பு பகுதிகள் அனைத்தும் வெள்ளத்தால் சூழப்பட்டிருந்தது.

இதனால் அங்கு வசித்து வந்த மக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டனர். குடிநீர் மற்றும் உணவு, பால் இன்றி தவித்தனர்.

பாதிக்கப்பட்டவர்களை மீட்க சென்னையில் உள்ள தக்ஷிண பாரத ராணுவ மையத்தைச் சேர்ந்த 12வது மெட்ராஸ் படைப் பிரிவைச் சேர்ந்த ராணுவ வீரர்கள் சம்பவ இடத்துக்கு படகுகள் உள்ளிட்ட மீட்பு உபகரணங்களுடன் விரைந்து சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.

வீடுகளில் தனியாக சிக்கித் தவித்த வயதானவர்கள், குழந்தைகள், கர்ப்பிணிகள் உள்ளிட்டவர்களுக்கு உணவுப் பொருட்கள், மருந்துகள், குடிநீர் உள்ளிட்டவற்றை வழங்கினர்.

பல இடங்களில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தவர்களை படகுகள் மூலம் ராணுவ வீரர்கள் பத்திரமாக மீட்டனர். வெள்ளத்தால் செல்ல முடியாத பகுதிகள், 

சகதிகள் நிறைந்த பகுதிகள், விஷப்பாம்பு மற்றும் பூச்சிகளின் தொல்லை ஆகிய சிரமங்களை பொருட்படுத்தாமல் அவர்கள் இந்த மீட்பு பணியை செய்தனர்.
இதேபோன்று மழை வெள்ளத்தில் சிக்கித் தவித்த கர்ப்பிணிகள், உடல் நலம் பாதிக்கப்பட்ட குழந்தைகள் உள்ளிட்டோரையும் பத்திரமாக மீட்டனர். 

மூன்று நாட்களில் மட்டும் 3,500 பேரை பத்திரமாக மீட்டனர். இதேபோல் மீட்பு பணியில் கடற்படை மற்றும் விமானப் படை வீரர்களும் ஈடுபட்டனர்.

விமானப் படையின் 2 ஹெலிகாப்டர் மூலம் தென் சென்னையில் மேடவாக்கம் முதல் புழுதிவாக்கம் வரையிலும், வடசென்னையில் மணலி முதல் நாப்பாளையம் வரை உள்ள 16 இடங்களில் வெள்ளத்தில் சிக்கித் தவித்த பொதுமக்களுக்கு அவர்களின் வீட்டு மொட்டை மாடி வழியாக உணவுப் பொருட்கள், குடிநீர் உள்ளிட்டவை வழங்கினர். மேலும் சென்னை மற்றும் தாம்பரம் மாநகராட்சியுடன் இணைந்து மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் முப்படை வீரர்கள் ஈடுபட்டனர்.

இந்தியக் கடலோர காவல்படையின் 8 கப்பல்கள் மற்றும் 2 விமானங்கள் மூலம் கடல் பகுதியில் மீன்பிடிக்கச் சென்ற 3 ஆயிரம் மீன்பிடி படகுகளையும், வணிகக் கப்பல்களைம் பத்திரமாக கரை திரும்புவதற்கு உதவி புரிந்தனர். இதன் காரணமாக சென்னை கடல் பகுதியில் எவ்வித உயிர்சேதமும் ஏற்படவில்லை. பொதுமக்களை பத்திரமாக மீட்ட முப்படை வீரர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top