பள்ளி கட்டிட விபத்தில் 5 குழந்தைகள் பலத்த காயம்: திமுக அரசின் பள்ளிக்கல்வித்துறை லட்சணம் இதுதானா?

திருவள்ளூர் மாவட்டம் சிறுவனூரில் உள்ள அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் குழந்தைகள் மீது கட்டிடத்தின் ஓடுகள் இடிந்து விழுந்த விபத்தில் 5 குழந்தைகளுக்கு தலையில் பலத்த காயம் அடைந்துள்ளனர். இந்த சம்பவத்திற்கு பாஜக மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:  

திருவள்ளூர் மாவட்டம், சிறுவனூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் குழந்தைகள் மதிய உணவு அருந்தும் போது கட்டிடத்தின் ஓடுகள் இடிந்து விழுந்ததில் 5 குழந்தைகளுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது அதிர்ச்சியளிக்கிறது. தமிழகத்தில் அரசு பள்ளிகளின் சீர்கேட்டை எடுத்துக்காட்டுகிறது.

தமிழ்நாட்டில் உள்ள 21 ஆயிரத்து 136 ஒன்றிய மற்றும் நடுநிலை தொடக்கப்பள்ளிகளின் வகுப்பறைகளை கட்ட, மேம்படுத்த கடந்த ஆண்டே 240 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு, நடப்பாண்டில் 800 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்த நிலையில், சென்ற ஆண்டே சிறுவனூர் ஊராட்சி ஒன்றிய பள்ளி கட்டிடத்தை மேம்படுத்தாதது ஏன்? இந்த ஆண்டும் கண்டு கொள்ளாமல் விடப்பட்டதற்கு என்ன காரணம் என்பதை விளக்க வேண்டும்.

கட்டிடங்களின் உறுதி தன்மையை கண்காணிக்காதது ஏன்? யார் காரணம்? குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யாத அதிகாரிகள் யார்? இந்த அலட்சியத்திற்கு காரணம் யார்? ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி துறையின் இந்த மெத்தன போக்குக்கு காரணம் என்ன? ஊரக வளர்ச்சி துறை அமைச்சரும், கல்வி துறை அமைச்சரும் இதற்கு பொறுப்பேற்பார்களா? உடனடியாக அந்த பள்ளியின் கட்டிடம் மேம்படுத்தப்பட வேண்டும். படுகாயமடைந்த குழந்தைகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட வேண்டும். இந்த கொடூர சம்பவத்திற்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

தரமான கல்வியை வழங்குவதில் இந்தியாவிலேயே தமிழகம் இரண்டாவது இடத்தில் இருக்கிறது என்று ஜூன் 26 அன்று பெருமை பொங்க பேசினார் முதல்வர் ஸ்டாலின் அவர்கள். ஒரு ஒன்றிய தொடக்கப்பள்ளியை கூட ஒழுங்காக வைத்துக்கொள்ள முடியாது, குழந்தைகளின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கும் அரசு, கல்வியில் நாங்கள் சாதித்து விட்டோம் என்று தம்பட்டம் அடித்துக் கொள்வது வெட்கக்கேடு. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top