சென்னையில் மிக்ஜாம் புயல் மழை வெள்ளத்தால் அதிகமான பாதிப்பை சந்தித்த அம்பத்தூர் தொழிற்பேட்டை உற்பத்தியாளர்களுக்கு அனைத்து உதவிகளும் செய்யப்படும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உறுதி அளித்துள்ளார்.
டெல்லியில் நேற்று தமிழக பாஜக நிர்வாகிகளுடன் அம்பத்தூர் தொழிற்பேட்டை உற்பத்தியாளர்கள் மற்றும் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் அமைப்பின் பிரதிநிதிகள் குழு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்தனர். அப்போது புயல் மழையால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து தெரிவித்தனர். இதனை கேட்டுக்கொண்ட நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அனைத்து உதவிகளும் செய்யப்படுவதாக உறுதி அளித்தார்.
இது தொடர்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்;
இன்றைய தினம் தமிழக பா.ஜ.க.வின் மூத்த தலைவர்கள் தலைமையில் அம்பத்தூர் தொழிற்பேட்டை உற்பத்தியாளர்கள் சங்கம், இந்திய சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் அமைப்பின் பிரதிநிதிகளை தனது அலுவலகத்தில் சந்தித்த மாண்புமிகு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாரமான் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம். இப்படிப்பட்ட விரைவான நடவடிக்கைகள் தான் முந்தைய ஆட்சிகளை விட நமது 9 ஆண்டுகால ஆட்சி தனித்துவமாய் தெரிகிறது.
நமது மாண்புமிகு பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தமிழக மக்களின் நலன்களை எப்போதும் பாதுகாத்து வருகிறார். அம்பத்தூர் தொழிற்பேட்டையில் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்கியுள்ள சிறுதொழில் நிறுவனங்களின் கவலையைத் தீர்க்க மத்திய அரசு எடுத்துள்ள இந்த விரைவான நடவடிக்கை தான், மக்களுக்கு தேவைப்படும் காலங்களில் அவர்களுக்கு துணையாக நமது அரசு நிற்கும் என்ற பிரதமர் மோடியின் உத்தரவாதம் சிறந்த எடுத்துக்காட்டு.
காப்பீட்டு செயல்முறைகளை எளிதாக்கியதன் மூலம் உற்பத்தி அலகுகளில் மீண்டும் பணிகளை துவக்குவது விரைவாக நடக்கும். அம்பத்தூர் தொழிலாளர்களுக்கு தேவையான உதவிகளை செய்து கொடுத்த மாண்புமிகு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களுக்கு எங்கள் மனம் நிறைந்த நன்றியை தெரிவிக்கிறோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
சென்னை தொழிற்பேட்டை உற்பத்தி சங்க பிரதிநிதிகள் நிர்மலா சீதாராமனை சந்தித்தது தொடர்பாக மத்திய நிதியமைச்சகம் கூறியிருப்பதாவது:
சென்னையை சேர்ந்த அம்பத்தூர் தொழிற்பேட்டை உற்பத்தி சங்க பிரதிநிதிகள் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களை டெல்லியில் சந்தித்து புயலால் தொழில்துறைக்கு ஏற்பட்ட இழப்புகள் குறித்து விளக்கினர்.
சேதத்தை மதிப்பிட அதிக மதிப்பீட்டாளர்களை உடனடியாக நியமிக்க பொதுத்துறை பொது காப்பீட்டு நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. வரும் டிசம்பர் 20ஆம் தேதி முதல் உரிமை கோரல்கள்களுக்காக சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட உள்ளது.
தகுதியான காப்பீட்டு கோரிக்கைகளை விரைவாக வழங்குவதை உறுதி செய்ய தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு எடுக்கும் என்று மத்திய நிதியமைச்சர் உறுதியளித்தார்.