10,000 புதிய பள்ளிக் கட்டடங்கள் எங்கே? விடியாத அரசுக்கு மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி!

தமிழகத்தில் உள்ள சிதிலமடைந்த பள்ளிக் கட்டடங்கள் இடிக்கப்பட்டு புதிதாக கட்டப்படும் என விடியாத திமுக அரசு அறிவித்த 10,000 கட்டடங்கள் எங்கே என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்;  

திருவள்ளூர் மாவட்டம் சிறுவனூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், பள்ளிக் கட்டிடத்தின் ஓடுகள் இடிந்து விழுந்து, ஐந்து குழந்தைகள், தலையில் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் செய்தி அறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன். முன்னதாக, மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில், மரத்தடியில் அமர்ந்து படித்துக் கொண்டிருந்த மாணவ மாணவியர் மீது, மரம் வேரோடு சரிந்து விழுந்ததில், 17 மாணவ மாணவியர் காயமடைந்தனர் என்ற செய்தியும் காண நேர்ந்தது. அனைவரும் விரைந்து நலம் பெற வேண்டும் என்று இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.

திமுக ஆட்சிக்கு வந்ததும், தமிழகம் முழுவதும் உள்ள 10,000 சிதிலமடைந்த பள்ளிக் கட்டிடங்கள் இடிக்கப்பட்டு, புதிய கட்டிடங்கள் கட்டிக் கொடுக்கப்படும் என்று அறிவித்து மூன்று ஆண்டுகள் ஆகின்றன. பல முறை அவை குறித்துக் கேள்வி எழுப்பியும், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் எந்த விளக்கமும் அளித்ததாகத் தெரியவில்லை.

குழந்தைகள் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ள கட்டிடங்களில் பள்ளிகள் தொடர்ந்து செயல்படுவதை எப்படி அனுமதிக்க முடியும்? இந்த 10,000 பள்ளிக் கட்டிடங்கள் எவை எவை, இவற்றில் எத்தனை பள்ளிகளுக்குப் புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன, சிதிலமைடைந்த பள்ளிக் கட்டிடங்களுக்குப் பதிலாக, மாற்று இடங்களில் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றனவா என்பதை, பொதுமக்களுக்குத் தெரிவிக்க திமுக அரசு கடமைப்பட்டுள்ளது.

உடனடியாக, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர், பள்ளிகளுக்கான கட்டிடங்கள் கட்டி முடிக்க, குறிப்பிட்ட காலக்கெடு நிர்ணயித்துச் செயல்பட வேண்டும் என்றும், இவை குறித்த விவரங்களை, பொதுமக்கள் பார்வைக்கு வைக்க வேண்டும் என்றும் பாஜக சார்பாக வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top