நாட்டின் ஒற்றுமை மற்றும் பன்முகத்தன்மைக்கு காசி தமிழ் சங்கமம் 2.0 ஒரு சான்று என பிரதமர் நரேந்திர மோடி பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.
காசி தமிழ் சங்கமம் கடந்த 2022ஆம் ஆண்டில் நடைபெற்ற நிகழ்வுகளுக்கு கிடைத்த அமோக வரவேற்பை தொடர்ந்து, பல நூற்றாண்டுகளாக இருந்து வரும் தமிழ்நாட்டிற்கும் காசிக்கும் இடையிலான பழங்கால கலாச்சார தொடர்புகளை மீண்டும் கண்டறிந்து உறுதிப்படுத்தி, கொண்டாடும் முயற்சிகளை தொடர முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து இரண்டாவது “காசி தமிழ் சங்கமம்” டிசம்பர் 17முதல் டிசம்பர் 30ஆம் தேதி வரை வாரணாசியில் நடைபெறுகிறது. இதற்காக தமிழகத்தில் இருந்து சிறப்பு ரயில்களும் இயக்கப்பட உள்ளது.
இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி எக்ஸ் வலைத்தளத்தில் கூறியிருப்பதாவது: காசி மீண்டும் ஒருமுறை பழமையான கலாச்சாரங்களின் கொண்டாட்டமான காசி தமிழ் சங்கமத்திற்கு மக்களை உற்சாகமாக வரவேற்க தயாராகிறது.
இந்நிகழ்வு இந்தியாவின் ஒற்றுமை மற்றும் பன்முகத்தன்மைக்கு ஒரு சான்றாகவும் ‘ஒரே பாரதம் உன்னத பாரதம்’ உணர்வையும் வலுப்படுத்துகிறது என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.