திமுக அமைச்சர் பொன்முடி குற்றவாளி: சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

திமுக அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் தற்போது குற்றவாளி என சென்னை உயர் நீதிமன்றம் பரபரப்பான தீர்ப்பை வழங்கியுள்ளது.

பொன்முடி கடந்த 1996-ம் ஆண்டு முதல் 2001-ம் ஆண்டு வரை திமுக ஆட்சியின்போது போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தார். அப்போது வருமானத்துக்கு அதிகமாக ஒரு கோடியே 36 லட்சம் ரூபாய் சொத்து சேர்த்ததாக அவர் மீதும் அவரது மனைவி விசாலாட்சி மீதும் தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை கடந்த 2002 மார்ச் 14-ம் தேதி வழக்குப் பதிவு செய்தது.

இந்த வழக்கு முதலில் விழுப்புரம் மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்றத்திலும் பின்னர் 2015 -ல் விழுப்புரம் லஞ்ச ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்திலும் வழக்கு விசாரணை நடைபெற்றது. ஆனால் 2022-ம் ஆண்டு நவம்பர் மாதம் இந்த வழக்கு வேலூர் முதன்மை அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.

ஏராளமான சாட்சியங்கள் விசாரிக்கப்பட்டு வாதங்கள் நிறைவடைந்த நிலையில் கடந்த ஜூன் 28-ம் தேதி நீதிபதி தீர்ப்பு வழங்கினார். அப்போது பொன்முடி மற்றும் அவரது மனைவி மீதான குற்றச்சாட்டுகளுக்கு போதிய ஆதாரங்கள் இல்லாத காரணத்தால் இந்த வழக்கில் இருந்து விடுதலை செய்து தீர்ப்பு வழங்கினார்.

இந்த நிலையில், குற்ற விசாரணை சட்டம் 391-வது பிரிவின்படி விசாரணை நீதிமன்றங்களின் முடிவுகளை ஆய்வு செய்ய வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் அடிப்படையில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து மீண்டும் விசாரணைக்கு எடுத்தார்.

இதனால் தமிழக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்பட்டது. இதன் பின்னர் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தொடர்ந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என பொன்முடி தரப்பில் உச்ச நீதிமன்றத்தை நாடியது. ஆனால் அவர்கள் தலையில் உச்ச நீதிமன்றம் கொட்டு வைத்தது போன்ற ஒரு தீர்ப்பை கூறியது. ஊழல் செய்பவர்கள் மீது தைரியமாக வழக்கை எடுத்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷிக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. வழக்கை தொடர்ந்து விசாரிக்கலாம் எனவும் உச்ச நீதிமன்றம் கூறியது.

இதன் பின்னர் சில வாரங்களில் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் மதுரை உயர்நீதிமன்ற கிளைக்கு மாற்றப்பட்டதால், இந்த வழக்கு நீதிபதி ஜெயந்திரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

இந்த நிலையில், இந்த வழக்கில் நீதிபதி ஜெயச்சந்திரன் இன்று தீர்ப்பளித்தார். அதில் அமைச்சர் பொன்முடி உள்ளிட்டோரை சிறப்பு நீதிமன்றம் விடுதலை செய்தது தவறு என்றும், 64.90 சதவீதம் சொத்து சேர்த்துள்ளது நிரூபணம் ஆகியுள்ளது என்றும், தெரிவித்தார்.

எனவே, அமைச்சர் பொன்முடியை கீழமை நீதிமன்றம் விடுதலை செய்த உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது என்றும், தண்டனை விவரங்கள் டிசம்பர் 21ம் தேதி அறிவிக்கப்படும் என்றும், அன்றைய நாள் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி நேரில் ஆஜராக வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.

இதனால் பொன்முடி தனது அமைச்சர் பதவியை இழப்பார் என அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர். திமுகவில் ஊழல் செய்தவர்கள் சிறைக்கு அனுப்ப வேண்டும் என ஒவ்வொரு சாமானியனும் குரல் கொடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top