வருமானத்துக்கு அதிகமாக ஊழல் செய்து சொத்து குவித்த வழக்கில் குற்றவாளி என நேற்றைய முன்தினம் (19.12.2023) தீர்ப்பளிக்கப்பட்ட பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சிக்கு இன்று (21.12.2023) மூன்று ஆண்டுகால சிறை தண்டனை விதித்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் தீர்ப்பு வழங்கினர். இதன் காரணமாக பொன்முடி அமைச்சர் பதவியை இழந்தார். மேலும் 3 ஆண்டுகள் தண்டனை காலத்துக்குப் பின் 6 ஆண்டுகள் பொன்முடி தேர்தலில் போட்டியிடவும் முடியாது. தற்போது பொன்முடி தரப்பில் மேல்முறையீடு செய்வதற்காக சிறை தண்டனை ஒரு மாதம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
கடந்த 1996–2001ம் ஆண்டு திமுக ஆட்சியின் போது போக்குவரத்து துறை அமைச்சராக பதவி வகித்தார் பொன்முடி. அப்போது வருமானத்துக்கு அதிகமாக ஊழல் செய்து ஒரு கோடியே 36 லட்சம் சொத்து குவித்தார் என பொன்முடி மீது 2011-ல் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதில் பொன்முடி மனைவி விசாலாட்சியும் சேர்க்கப்பட்டார்.
சர்ச்சையான வகையில் இந்த வழக்கு விழுப்புரம் நீதிமன்றத்தில் இருந்து வேலூர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. அங்கு நடந்த விசாரணையின் முடிவில் விசாரணை நடைபெற்று, வேலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி உள்ளிட்டோரை ஜூன் மாதம் விடுதலை செய்தது.
வழக்கத்துக்கு மாறான வேகத்தில் வழங்கப்பட்ட இந்த தீர்ப்பை மறு ஆய்வு செய்ய எண்ணிய நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், வழக்கை தாமாக முன்வந்து மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொண்டார். அதன் பின்னர் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளைக்கு மாற்றப்பட்டார். இதனால் இந்த வழக்கு நீதிபதி ஜெயச்சந்திரன் அமர்வுக்கு மாற்றப்பட்டது.
பொன்முடி குற்றவாளி:
வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன் கடந்த (19.12.2023) தீர்ப்பளிக்கையில், வருமானத்துக்கு அதிகமாக 64.09% பொன்முடி சொத்து குவித்திருப்பது உறுதியாகி உள்ளது. இந்த வழக்கில் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி குற்றவாளி என அறிவித்தார். அவர்களுக்கான தண்டனை விவரங்கள் டிசம்பர் 21 (இன்று) அறிவிக்கப்படும், அன்றைய நாள் இருவரும் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டிருந்தார்.
தண்டனை விவரங்கள்:
இன்று (டிசம்பர் 21) சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பாக பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி ஆஜராகினர். அப்போது பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி ஜெயச்சந்திரன் உத்தரவிட்டார்.
தீர்ப்பு விவரங்கள்:
பொன்முடி, மனைவி விசாலாட்சிக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இருவருக்கும் தலா ரூ50 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. அத்துடன் பொன்முடி மற்றும் விசாலாட்சி மேல்முறையீடு செய்ய 30 நாட்களுக்கு தண்டனை நிறுத்தி வைக்கப்படுகிறது. இந்த 30 நாட்களுக்கு பின்னர் விழுப்புரம் நீதிமன்றத்தில் பொன்முடி சரணடைய வேண்டும் என நீதிபதி தீர்ப்பில் கூறியுள்ளார்.
அமைச்சர் பதவி பறிபோனது:
மக்கள் பிரதிநிதிகளுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டால் அவர்களது எம்.பி. அல்லது எம்.எல்.ஏ. பதவி பறிக்கப்படும். தற்போது 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதால் பொன்முடி தனது அமைச்சர் பதவியை இழந்தார். மேலும் இந்த 3 ஆண்டு தண்டனை காலத்துக்குப் பின் 6 ஆண்டுகளும் தேர்தலில் பொன்முடியால் போட்டியிடவும் முடியாது.
திமுக ஆட்சிக்கு வந்த காலம் தொட்டு பல்வேறு ஊழல்களை செய்த கட்சி திமுக. மக்களின் வரிப்பணத்தை ஊழல் மூலம் கொள்ளையடித்து வெளிநாடுகளில் தொழிற்சாலைகள், ஓட்டல்களை வாங்கி குவித்து வரும் திமுக அமைச்சர்களுக்கு பொன்முடியின் தீர்ப்பு ஒரு எச்சரிக்கையாகும்! விரைவில் ஊழலில் சிக்கியுள்ள அனைத்து திமுக அமைச்சர்களும் ஒவ்வொருவராக சிறை செல்வது உறுதி. ஏற்கனவே பணமோசடி வழக்கில் செந்தில் பாலாஜி புழல் சிறையில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.