கடந்த டிசம்பர் 17ம் தேதி ஞாயிற்றுக்கிழமை இரவு 8.25 மணிக்கு திருச்செந்தூர் ரயில் நிலையத்தில் இருந்து சென்னைக்கு செல்லும் செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டது. அந்த ரயிலில் சுமார் 957 பயணிகள் பயணித்தனர். அப்போது பெருமழை காரணமாக ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் பாதுகாப்பு கருதி அந்த ரயில் நிறுத்தி வைக்கப்பட்டது.
பின்னர் ரயில் நிலையம் முழுவதும் மழை வெள்ளம் சூழ்ந்து கொண்டதால் ரயிலை மேற்கொண்டு இயக்க முடியாமல் அங்கேயே நிறுத்தப்பட்டிருந்தது. பயணிகள் அச்சத்தில் அன்றைய இரவு முழுவதும் ரயிலில் காத்திருந்தனர். அதன் பின்னர் விமானப்படை ஹெலிகாப்டர் மூலமாக பயணிகளுக்கு தேவையான உணவு, குடிநீர் விநியோகிக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து பயணிகளை பாதுகாப்பாக மீட்பதற்காக தேசிய பேரிடர் மீட்புக்குழு ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தை அடைந்து அங்கிருந்த பயணிகளை பத்திரமாக கயிறு கட்டி, மீட்டு ஒவ்வொரு நபராக அருகில் உள்ள வெள்ளூர் என்ற கிராமத்திற்கு அழைத்து வந்தனர். அங்கிருந்து பேருந்துகளில் வாஞ்சி மணியாச்சி ரயில் நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்டு சிறப்பு ரயில் மூலம் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். பாதுகாப்புடன் வருவதற்கு அனைத்து உதவிகளையும் செய்த மத்திய அரசுக்கு பயணிகள் நன்றியை தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், இது தொடர்பாக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தனது எக்ஸ் வலைத்தளப்பதிவில் கூறியிருப்பதாவது:
தென் தமிழகத்தில் வரலாறு காணாத மழையால் வெள்ளம் ஏற்பட்டு மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். தண்டவாளங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ரயில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டு, செந்தூர் விரைவு ரயில் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. வெள்ளப்பெருக்கால் சாலை போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டு ஸ்ரீவைகுண்டம் தனித் தீவாக மாறியது. இதனால் இந்த ரயிலில் சிக்கியுள்ள பயணிகளை பாதுகாப்பாக மீட்க மத்திய ரயில்வே அமைச்சரிடம் வைக்கப்பட்ட கோரிக்கையை அடுத்து உடனடியாக ரயில்வே அதிகாரிகளிடம் பேசி நிலைமையை தொடர்ந்து கண்காணித்து பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
அவர்கள் அனைவரும் சிறப்பு ரயில் மூலமாக சென்னைக்கும் மற்றும் அவர்கள் சொந்த ஊர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இதற்காக தமிழக மக்கள் சார்பாக மத்திய ரயில்வே துறை அமைச்சர் திரு. அஷ்வின் வைஷ்ணவ் ஜி அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழக மக்களுக்கு தேவை ஏற்படும்போதெல்லாம் பாரத பிரதமர் திரு. நரேந்திர மோடி அரசு அவர்களுக்கு உறுதுணையாக இருக்கிறது என்பது மீண்டும் உறுதியாகி உள்ளது. இவ்வாறு மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் குறிப்பிட்டுள்ளார்.