கடந்த 2006-2011ம் ஆண்டுகளில் திமுக அரசில் உயர்கல்வி மற்றும் கனிம வளங்கள் அமைச்சராக பொன்முடி பதவி வகித்தார். அப்போது விழுப்புரம் மாவட்டத்தில் செம்மண் குவாரியில் அதிகளவில் செம்மண் எடுத்ததன் மூலம் அரசுக்கு 28 கோடியே 36 லட்சத்து 40 ஆயிரத்து 600 ரூபாய் இழப்பு ஏற்படுத்தப்பட்து. இதற்கு காரணமான பொன்முடி மகன் கவுதம சிகாமணி, உறவினர் ராஜமகேந்திரன் உள்ளிட்டோர் மீது 2012ல் லஞ்ச ஒழிப்பு துறை வழக்குப்பதிவு செய்தது.
விழுப்புரம் மாவட்ட நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணையில் உள்ளது. இந்த வழக்கில் அமலாக்கத் துறை அதிகாரிகள் பொன்முடி மற்றும் அவரது மகன் கவுதம சிகாமணி தொடர்புடைய இடங்களில் கடந்த ஜூலை மாதம் சோதனை நடத்தினர். சோதனை முடிவில் பொன்முடி அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு விசாரிக்கப்பட்டார்.
செம்மண் முறைகேட்டில் கிடைத்த மிகப்பெரிய பணத்தை ஹவாலா பரிவர்த்தனைகள் மூலம் வெளிநாட்டு நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளதாகவும், சோதனையின் முடிவில் முக்கிய ஆவணங்களும், 13 லட்சம் ரூபாய் மதிப்பிலான பிரிட்டன் பவுண்ட்கள் உள்பட 81 லட்சத்து 70 ஆயிரம் ரூபாயும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், 41 கோடியே 90 லட்சம் ரூபாய் வங்கி நிரந்தர வைப்பீடு முடக்கப்பட்டுள்ளதாகவும் அமலாக்கத்துறை கூறியிருந்தது.
இந்த நிலையில், சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கு தொடர்பாக பொன்முடியின் மகனும் கள்ளக்குறிச்சி திமுக எம்.பி.யுமான கவுதம சிகாமணி மற்றும் ராஜ மகேந்திரன், ஜெயசந்திரன், சதானந்தம், கோபிநாத் உள்ளிட்ட ஆறு பேருக்கு எதிராக அமலாக்கத்துறை சார்பில் ஆகஸ்ட் மாதம் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் 90 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. இந்த வழக்கு சென்னை 12வது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி முன்பு விசாரணை நடைபெற்று வருகிறது.
கடந்த மாதம் 24ம் தேதி கவுதம சிகாமணி, ராஜ மகேந்திரன், ஜெயசந்திரன், சதானந்தம், கோபிநாத் உள்ளிட்டோர் நேரில் ஆஜராகி இருந்தனர். அவர்களுக்கு குற்றபத்திரிக்கை நகல்கள் வழங்கப்பட்டது. குற்றச்சாட்டுகள் பதிவிற்கு இன்று (டிசம்பர் 22) வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது கௌதம சிகாமணி நேரில் ஆஜராகவில்லை. அப்போது அவர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் விசாரணை அடுத்த மாதம் தள்ளிவைக்க வேண்டும் என கோரினார்.
அப்போது நீதிபதி நீண்ட நாள் விசாரணை தள்ளிவைக்க முடியாது என தெரிவித்தார். பின்னர் விசாரணை ஜனவரி 4ம் தேதிக்கு தள்ளிவைத்த நீதிபதி அன்று குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படும் என கூறினார். அன்றைய தினம் நேரில் ஆஜாராக வேண்டும் என உத்தரவிட்டார்.
நேற்று (டிசம்பர் 21) பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சிக்கு சென்னை உயர் நீதிமன்றம் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.50 லட்சம் அபராதம் விதித்துள்ளது. மேல்முறையீட்டு நிலையை கணக்கில் கொண்டு 30 நாட்களில் விழுப்புரம் நீதிமன்றத்தில் சரணடையவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பொன்முடி மற்றும் அவரது மனைவிக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் தற்போது அவரது மகன் கவுதம சிகாமணி மீதான வழக்கின் பிடி இறுகிறது. விரைவில் குடும்பமே ஊழலுக்காக சிறையில் இருக்கும் என்பதில் ஆச்சரியம் இல்லை.
மாநிலத் தலைவர் அண்ணாமலை விரைவில் 11 அமைச்சர்கள் சிறைக்கு செல்வார்கள் என்றார். போகிற போக்கை பார்த்தால் அவர்கள் குடும்பமாகவே செல்வார்கள் போலத் தெரிகிறது!