‘‘உலகின் பல்வேறு இடங்களில் துன்புறுத்தலை எதிர்கொண்டாலும் இந்தியாவில் உள்ள இஸ்லாமியர்கள் பாதுகாப்பாக மகிழ்ச்சியுடனும், செழிப்புடனும் வாழ்கின்றனர். மத அடிப்படையில் சிறுபான்மையினரிடம் இங்கு எந்த பாகுபாடும் காட்டப்படுவது இல்லை,’’ என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
பிரிட்டனை தலைமையிடமாக வைத்து செயல்படும் வணிக பத்திரிகையான, ‘தி பினான்சியல் டைம்ஸ்’ பத்திரிகைக்கு பிரதமர் நரேந்திர மோடி அளித்துள்ள பேட்டி:
சமீபத்தில் எடுத்த கணக்கெடுப்பின்படி 2023ஆம் ஆண்டிற்கான அரசு மதிப்பீட்டின்படி இந்தியாவில் 20 கோடி இஸ்லாமியர்கள் வாழ்கின்றனர். இது நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 14.28 சதவீதம்.
உலகின் பிற இடங்களில் அவர்கள் துன்புறுத்தலை எதிர்கொண்டாலும் இந்தியாவில் ஒரு பாதுகாப்பான புகலிடத்தை கண்டுபிடித்து மகிழ்ச்சியாகவும், செழிப்பாகவும் வாழ்ந்து வருகின்றனர்.
சிறுபான்மையினத்தவரில் உள்ள பார்சி சமூகத்தினர் பொருளாதார ரீதியாக மிகப்பெரிய அளவில் வெற்றி கண்டுள்ளனர். இங்கு மத அடிப்படையில் சிறுபான்மையினரிடம் எந்த பாகுபாடும் காட்டப்படுவது இல்லை என்பது இதன் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
நாள்தோறும், தொலைக்காட்சி, செய்தித்தாள்கள், சமூக ஊடகங்கள் வாயிலாக சிறுபான்மையினர் விவகாரத்தில் மத்திய அரசின் நடவடிக்கை பற்றி பல்வேறு கேள்விகள் எழுப்பப்படுகின்றன.
பேச்சு சுதந்திரத்தை பயன்படுத்தி ஒவ்வொரு முறையும் இது போன்ற குற்றச்சாட்டுகளை எழுப்புகின்றனர். அவ்வாறு செய்ய அவர்களுக்கு உரிமை உண்டு. ஆனால் உண்மைகளை எடுத்துச் செல்ல பிறருக்கும் சம உரிமை உள்ளது என்பதை மறுக்க முடியாது.
கடந்த 1947ல் இந்தியா சுதந்திரம் அடைந்தபோது வெளியேறிய ஆங்கிலேயர்கள், இந்தியாவின் எதிர்காலம் குறித்து மிகவும் மோசமான கணிப்புகளை ஏற்படுத்தினர். ஆனால் அந்த கணிப்புகள், முன்முடிவுகள் அனைத்தும் பொய் என்று நிரூபிக்கப்பட்டிருக்கிறது.
அதேபோல் இன்றைய அரசையும் சந்தேகிப்பவர்களின் கருத்து தவறு என்பது நிரூபிக்கப்படும். சாமானிய மக்களின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தியதன் வாயிலாக அடுத்த ஆண்டு நடைபெற உள்ள மக்களவை தேர்தலிலும் பாஜக மிகப்பெரிய வெற்றியை பெறும் என்ற நம்பிக்கை உள்ளது.
இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.