டெல்லியில் இன்று (டிசம்பர் 22) மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சந்தித்து நன்றி தெரிவித்தார்.
கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய தென் மாவட்டங்களில் அதிகனமழை கொட்டி தீர்த்தது. இதனால், அப்பகுதிகள் வெள்ளக்காடாக காட்சியளித்தது. குடியிருப்புகளில் மழை வெள்ளம் சூழ்ந்ததால் மக்கள் வெளியேற முடியாமல் தவித்தனர்.
இதனையடுத்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாரமன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு மழை தீவிரம் பற்றி எடுத்துரைத்து தேவையான உதவிகளை மேற்கொள்ள கோரியிருந்தார். இதன் பின்னர் முப்படைகளும் களத்தில் இறங்கி வெள்ளத்தில் சிக்கிய பொதுமக்களை பத்திரமாக மீட்டனர். வெள்ளத்தால் சூழப்பட்ட மக்களுக்கு ஹெலிகாப்டர் மூலம் உணவுகள், குடிநீர், மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை ராணுவ வீரர்கள் வழங்கி வந்தனர். தற்போது இந்த மாவட்டங்களில் இயல்பு வாழ்க்கை திரும்பி வருகிறது.
இந்த நிலையில் டெல்லி சென்றுள்ள தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து நன்றி தெரிவித்துள்ளார். இந்த சந்திப்பின் போது மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தமிழக பாஜக மேலிட இணைப் பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி ஆகியோர் உடன் இருந்தனர்.
இது பற்றி அண்ணாமலை தனது எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது:
தென் தமிழகத்தில் வெள்ளம் ஏற்படுத்திய பேரழிவைக் கணக்கில் எடுத்துக்கொண்டு, டிசம்பர் 20ஆம் தேதி முதல் தென் தமிழகத்தில் இருந்து, ஏற்பட்ட சேதங்களை மதிப்பிடும் வகையில், மத்திய குழுவை விரைந்து அனுப்பியதற்கு நன்றி எனத் தெரிவித்துள்ளார்.