எம்.பி. – எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான வழக்குகளை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் மீண்டும் விசாரிக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
1996 -2001ம் ஆண்டில் போக்குவரத்துத்துறை அமைச்சராக பதவி வகித்த பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி உள்ளிட்டோர் வருமானத்திற்கு அதிகமான சொத்துக்களை குவித்தனர். இது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கில் இருந்து வேலூர் நீதிமன்றம் விடுதலை செய்தது.
இந்த உத்தரவை மறுஆய்வு செய்யும் விதமாக தாமாக முன்வந்து சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விசாரணைக்கு எடுத்தார். பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி உள்ளிட்டோர் பதில் அளிக்க உத்தரவிட்டிருந்தார்.
அதே போன்று திமுக அமைச்சர்கள் பெரியசாமி, தங்கம் தென்னரசு, ராமச்சந்திரன் மற்றும் முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், அதிமுக முன்னாள் அமைச்சர் வளர்மதி ஆகியோரை விடுவித்து சிறப்பு நீதிமன்றங்கள் பிறப்பித்த உத்தரவுகளையும் ஆய்வு செய்யும் விதமாக தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தார் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்.
இதன் பின்னர் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் திடீரென்று மதுரை உயர்நீதிமன்ற கிளைக்கு மாற்றலாகி சென்றார்.
இதனையடுத்து சென்னை உயர் நீதிமன்றத்தில் எம்.பி. எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் பொறுப்பு நீதிபதி ஜெயச்சந்திரனுக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுக்கப்பட்ட வழக்குகளின் விசாரணையை ஜனவரி 8ம் தேதிக்கு நீதிபதி ஜெயச்சந்திரன் தள்ளி வைத்தார். இவ்வாறு விசாரணைக்கு எடுக்கப்பட்ட வழக்குகள் தொடர்பாக பதிவுத்துறையிடம் நீதிபதி விளக்கம் கோரியிருந்தார்.
இந்நிலையில் கிறிஸ்துமஸ் விடுமுறைக்கு பின் ஜனவரி 2 முதல் சென்னை உயர் நீதிமன்றத்தில் அமர்ந்து வழக்குகளை விசாரிக்க உள்ளார் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ். அவருக்கு எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் பொறுப்பு மீண்டும் வழங்கப்பட்டுள்ளது.
மீண்டும் எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான வழக்குகளை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விசாரிப்பார் என்ற தகவல் வெளியானதும் சமூக வலைத்தளங்களில் அவருக்கு பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. ஊழல் செய்தவர்களை சட்டப்படி தண்டிக்கும் கடமை நீதிமன்றத்திற்கு மட்டுமே உள்ளது. மக்கள் நீதிமன்றத்தின் மீது மதிப்பும், மரியாதையும் வைத்துள்ளனர்.
மறுபடியும் ஊழலுக்கு எதிரான வழக்குகளை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விசாரிப்பார் என்ற தகவல் பரவியதும் இது திமுகவினர் மத்தியில் பயத்தை ஏற்படுத்தியுள்ளது. ஊழலுக்கு எதிராக கடுமையான தண்டனை வழங்கப்பட்டால் மட்டுமே அடுத்து வருபவர்கள் தவறு செய்ய மாட்டார்கள்.