தொழில் அதிபருக்கு 25 கோடி ரூபாய் வங்கியில் கடன் பெற்றுத் தருவதாக 86 லட்சம் ரூபாய் வாங்கிக்கொண்டு ஏமாற்றிய திமுகவைச் சேர்ந்த முத்துவேல் மற்றும் அவரது கூட்டாளி பெண்ணையும் போலீசார் கைது செய்தனர்.
சென்னை கொடுங்கையூர் காமராஜர் சாலையைச் சேர்ந்தவர் கிருஷ்ணகுமார். இவர் ஏற்றுமதி செய்யும் தொழில் செய்து வருகிறார். இவர் தனது தொழில் அபிவிருத்திக்காக வில்லிவாக்கத்தைச் சேர்ந்த திமுக நிர்வாகி முத்துவேல் என்பவரை அணுகியுள்ளார்.
அப்போது கிருஷ்ணகுமாரிடம் 25 கோடி ரூபாய் வங்கி கடன் வாங்கித் தருகிறேன். அதற்கு கமிஷனாக 86 லட்சம் ரூபாய் தர வேண்டும் என முத்துவேல் கூறியுள்ளார். அதன்படி வங்கி கடன் பெற்றுத் தராமல் பணத்தை வாங்கி மோசடி செய்துள்ளார்.
இது தொடர்பாக கிருஷ்ணகுமார் சென்னை நந்தம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்படி வில்லிவாக்கம் ஜெகநாத நகரைச் சேர்ந்த முத்துவேல் மற்றும் அவரது பெண் கூட்டாளி ஏஞ்சலினா கிறிஸ்டி நிஷா ஆகியோரை நேற்று (டிசம்பர் 24) போலீசார் கைது செய்தனர்.
ஏற்கனவே 200 கோடி ரூபாய்க்கு மேல் வங்கி கடன் வாங்கித் தருவது போல மோசடி செய்தது தொடர்பாக மூன்று வழக்குகளில் மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டு ஜாமினில் வெளியே வந்துள்ளார். தற்போது மீண்டும் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.