திமுகவினரின் சாராய ஆலைகளுக்கு வருமானம் கொண்டு வரவே ஆட்சி:  தலைவர் அண்ணாமலை ஆவேசம்!

திமுகவினர் நடத்தும் சாராய ஆலைகளுக்கு வருமானம் கொண்டு வருவதற்காக மட்டுமே ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறார்களே தவிர, மக்களுக்கான ஆட்சி அல்ல என பாஜக தலைவர் அண்ணாமலை ஆவேசமாக கருத்து  தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் என் மண் என் மக்கள் 5ம் கட்ட யாத்திரை வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. அதன்படி நேற்று (டிசம்பர் 25) தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம், கும்பகோணம் சட்டமன்ற தொகுதிகளில் நடைபெற்றது. யாத்திரையின் போது பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு செய்த 9 ஆண்டு சாதனைகளை பொது மக்களுக்கு  எடுத்துக் கூறினார் தலைவர் அண்ணாமலை.

 இந்த நிலையில், யாத்திரைப் பயணம் தொடர்பாக தனது சமூக வலைத்தளப்பக்கத்தில் அவர் பகிர்ந்திருப்பதாவது:

நேற்றைய மாலை (டிசம்பர் 25) என் மண் என் மக்கள் பயணம், ஆதி கும்பேஸ்வரரும் சாரங்கபாணி பெருமாளும் அருள்பாலிக்கும் கோவில்களால் சூழப்பட்ட திருக்குடந்தை என்றழைக்கப்படும் கும்பகோணம் நகரில், நல்லரசியல் வேண்டும் என்று திரளெனக் கூடிய பொதுமக்கள் மத்தியில் எழுச்சியோடு சிறப்பாக நடந்தது. இந்தியாவின் பசியை போக்கிய, பசுமைப் புரட்சியின் தந்தை திரு எம்.எஸ்.சுவாமிநாதன், உலகப் புகழ்பெற்ற கணித மேதை ராமானுஜம் ஆகியோர் வாழ்ந்த மண். தெற்காசியாவை சனாதன தர்மத்தின் வழி நடத்திய ராஜராஜ சோழன் அவர்களின் சமாதி அமைந்திருக்கும் உடையாளூர் உள்ள தொகுதி.

12 வருடங்களுக்கு ஒருமுறை நடக்கும் கும்பகோணம் மகாமக திருவிழா உலகப் புகழ்பெற்றது. மகாமக குளத்தில் குளித்தால் பாவங்கள் அனைத்தும் போய்விடும் என்பது ஐதீகம்.

சுதந்திரப் போராட்டத்தில், ஜாலியன் வாலாபாக் படுகொலை போன்று, கும்பகோணம் காங்கேயன் குளத்தின் கரையில், 1942 ஆகஸ்ட் 16 அன்று, வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் ஈடுபட்டவர்களில், 23 பேரை ஆங்கிலேய அரசு சுட்டுக்கொன்றிருக்கிறார்கள். இது குறித்த கல்வெட்டு, கும்பகோணம் போர்ட்டர் ஹால் வெளிச் சுவரில் இருக்கிறது. இத்தனை ஆண்டுகளாக, இந்த வரலாறு சொல்லப்படவில்லை. தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வரும்போது, ஜாலியன் வாலாபாக் போல கும்பகோணம் தியாகிகளுக்கு உரிய மரியாதை செலுத்தப்படும்.

கடந்த ஒன்பது ஆண்டுகளில், தமிழகத்துக்கு மட்டும் மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் தலைமையிலான மத்திய அரசு ரூ.10,76,000 கோடி பணம் வழங்கியுள்ளது. நூறு ரூபாய் ஜிஎஸ்டி வரியில், ரூ.71, தமிழகத்துக்கே நேரடியாகத் திரும்பி வழங்கப்படுகிறது. அது தவிர பேரிடர் கால நிதி, மத்திய அரசு திட்டங்கள் என தமிழர்கள் செலுத்திய ஒரு ரூபாய் வரி பணத்திற்கு இரண்டு ரூபாய் திரும்ப வழங்கப்பட்டுள்ளது.

ஆனால், அந்த நிதியை எல்லாம் ஊழல் செய்துவிட்டு மத்திய அரசின் மீது வீண் பழி சுமத்திக் கொண்டிருக்கிறது திமுக. திமுக மத்திய அரசிடம் கேட்கும் நிதி, உண்மையில், முதலமைச்சரின் மகனும் மருமகனும் ஒரு ஆண்டில் சம்பாதித்த 30,000 கோடி பணத்திலும், செந்தில் பாலாஜி வைத்திருக்கும் பணத்திலும், பொன்முடி, வங்கியில் வைப்பு நிதியாக வைத்திருக்கும் 42 கோடி ரூபாய் பணத்திலும், 4600 கோடி ரூபாய் மணல் கொள்ளை பணத்திலும், போக்குவரத்துத் துறையில் நடந்திருக்கும் 2000 கோடி ரூபாய் ஊழலிலும், ஜகத்ரட்சகன், டி.ஆர்.பாலு உள்ளிட்ட டிஎம்கே பைல்ஸ் மூன்று லட்சம் கோடி பணத்திலும்தான் இருக்கிறது.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தென் மாவட்ட மக்களை பார்க்க வராத முதலமைச்சர் ஸ்டாலின், இந்தி கூட்டணி பேச்சுவார்த்தைக்கு டெல்லி சென்றார். இதுதான் மக்கள் மீது அவருக்கு உள்ள அக்கறை. திமுகவினர் நடத்தும் சாராய ஆலைகளுக்கு வருமானம் வருவதற்காக மட்டுமே ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறார்களே தவிர, மக்களுக்கான ஆட்சி அல்ல.

ஒரு பாராளுமன்ற உறுப்பினர், பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களால் காசி எனும் கோவில் நகரம் இன்று தன்னை புதுப்பித்துக்கொண்டுள்ளது. தமிழகம் முழுவதுமே ஆன்மீக பூமிதான். வரும் பாராளுமன்றத் தேர்தலில், தமிழகம் இழந்த தனது பெருமையை மீட்க வேண்டுமென்றால், தமிழகம் முழுவதும் பாஜக வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும். பாரதப் பிரதமர் கரங்களை வலுப்படுத்த வேண்டும்.  

பாபநாசம் சட்டமன்றத்தொகுதி:

காவேரி, குடமுருட்டி, கொள்ளிடம் என மூன்று நதிகளால் சூழப்பட்ட வளமான பகுதியான பாபநாசம் மண்ணில் என் மண் என் மக்கள் யாத்திரை

சிறப்பாக நடந்தேறியது. முருகப் பெருமானின் ஆறுபடை வீடுகளில் நான்காம் படை வீடான சுவாமிமலை இந்த தொகுதியில் தான் அமைந்துள்ளது. ஆசியாவிலேயே மிகப்பெரிய நெற்களஞ்சியமான நாயக்க மன்னர் காலத்தில் கட்டப்பட்ட பாலைவனநாதர் கோவிலில் அமைந்திருக்கும் நெற்களஞ்சியம், அமைந்திருக்கும் தொகுதி இது.

சமீபத்தில் டெல்லியில் நடைபெற்ற ஜி 20 உலக மாநாட்டில், பாரத மண்டபம் முன்னர் 18,000 கிலோ எடையுடைய உலகிலேயே உயரமான நடராஜர் சிலை வைக்கப்பட்டது. அந்த நடராஜர் சிலை, சுவாமி மலையில்தான் உருவாக்கப்பட்டது. சமீபத்தில் நடந்த இரண்டாவது காசித் தமிழ் சங்கமம் தொடக்க விழாவில் 10 இந்திய மொழிகளிலும், 5 வெளிநாட்டு மொழிகளிலும், பார்வைக் குறைபாடுள்ள மாற்றுத்திறனாளிகள் பயன் பெற பிரெய்லி மொழியிலும் திருக்குறள் நூலை வெளியிட்டுள்ளார் நமது மாண்புமிகு பாரத பிரதமர் மோடி அவர்கள்.

தொல்காப்பியம், புறநானூறு, மணிமேகலை உட்பட 45 தமிழ் இலக்கண, இலக்கிய, சங்க இலக்கிய நூல்களை பிரெய்லி மொழியில் வெளியிட்டுள்ளார். உலக அளவில், தமிழ் மொழியையும், தமிழர் திறமையையும், பாரம்பரியத்தையும், தமிழ் கலாச்சாரத்தையும் உலகிற்கு எடுத்து சென்றிருக்கிறார். ஏழைகளுக்காகவும், மகளிருக்காகவும், இளைஞர்களுக்காகவும், விவசாயிகள் நலனுக்காகவும் தான், மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் நல்லாட்சி நடந்து கொண்டிருக்கிறது. அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க வேண்டும் என்ற உயரிய நோக்கம் உடையவர் நமது பிரதமர்.
பாபநாசம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஜவாஹிருல்லாவுக்கு, தீவிரவாதிகளை சிறையில் இருந்து விடுவிக்கப் போராடுவது, திமுக கட்சிக்காரர்களையே மிஞ்சும் அளவுக்கு, சட்டசபையில் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு ஜால்ரா போடுவது என்பதே முக்கிய வேலையாக இருக்கிறது. இவர் மேல், வெளிநாடுகளில் இருந்து சுமார் ஒன்றரை கோடி பணம், சட்டவிரோதமாகப் பெற்றதாக, வழக்கு இருக்கிறது. கீழமை நீதிமன்றங்களில் தண்டனை உறுதி செய்யப்பட்டு, தற்போது சென்னை உயர்நீதி மன்றத்தில் இந்த வழக்கு நிலுவையில் உள்ளது. இனி திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியினருக்கும் சிறையில் தனி கட்டிடம் தேவைப்படும்.

தமிழக மக்களின் வரிப்பணத்தை, ஏழை எளிய மக்கள் நலனுக்காக வழங்கப்பட்ட நிதியைச் சுரண்டி, திருடி ஊழல் செய்ததால், தமிழக அமைச்சர்கள் வரிசையாகச் சிறைக்குச் சென்று கொண்டிருக்கின்றனர். தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்கள் மீது ஊழல் வழக்கு இருக்கிறது. பேரிடர் நிதியாக, மத்திய அரசு தமிழக அரசுக்கு இந்த ஆண்டு 900 கோடி ரூபாய் கொடுத்துள்ளது. சென்ற ஆண்டு தமிழகத்திற்கு வழங்கிய நிதியில், 813 கோடி ரூபாய் செலவிடாமல் வைப்பு நிதியாக தமிழகத்திடம் இருந்தது. மொத்தம் மத்திய அரசு கொடுத்த பணம் 1713 கோடி ரூபாய் தமிழக அரசிடம் இருந்தது. மழை நிற்பதற்கு முன்பே மத்தியக் குழு ஆய்வு செய்ய வந்துவிட்டனர்.

தமிழக அரசு மழைக் காலத்தில், முன்னெச்சரிக்கை இல்லாமல் நடந்து கொண்டு, யார் அப்பன் வீட்டு பணம் என்று கோபாலபுரத்து இளவரசர் கேட்கிறார்.

முதலமைச்சர் மகனும் மருமகனும், ஒரே ஆண்டில் 30,000 கோடி ரூபாய் கொள்ளை அடித்தது, வேலை வாங்கித் தருகிறேன் என்று சொல்லி பணத்தை சுருட்டிக்கொண்டு ஓடி, சிறையில் இருக்கும் ஊழல் பாலாஜி, ஊழல் செய்த ரூ.42 கோடி பணம், வைப்பு நிதியில் வைத்திருக்கும் பொன்முடி, ஒரே ஆண்டில் 4600 கோடி ரூபாய் மணல் கொள்ளை, போக்குவரத்துத் துறையில் வருடம் 2000 கோடி ரூபாய் ஊழல் செய்த அமைச்சர் சிவசங்கர், ஜெகத்ரட்சகனிடம் பிடிபட்ட 1200 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு, ஊழல் வழக்கில் சிக்கி இருக்கும் 11 திமுக அமைச்சர்கள் சம்பாதித்து வைத்திருக்கும் பணம், இவை எல்லாம் யார் அப்பா வீட்டு பணம் என்று உதயநிதி சொல்வாரா?

பாபநாசம் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக, மக்களின் பேரன்பைப் பெற்ற ஐயா கருப்பையா மூப்பனார் அவர்கள், பெருந்தலைவர் காமராஜர் வழியில், தன்னலமற்ற, தூய்மையான அரசியல் தலைவராக விளங்கியவர். முதன்முதலாக வேட்டி கட்டிய தமிழர் மூப்பனார் அவர்கள் பிரதமர் ஆகும் வாய்ப்பை, சூழ்ச்சிகள் பல செய்து தடுத்தவர் கருணாநிதி. இதுதான் இவர்கள் நிலைப்பாடு.

தஞ்சாவூர் மாவட்டத்தை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை பணிகளுக்கு நமது மத்திய அரசு 3300 கோடி ரூபாய் செலவிட்டுள்ளது. 53,577 பேருக்கு பிரதமரின் வீடு திட்டம் மூலமாக வீடு, 3,81,295 வீடுகளில் குழாயில் குடிநீர், 2,46,421 வீடுகளில் இலவச கழிப்பறைகள், 1,19,869 பேருக்கு இலவச சமையல் எரிவாயு இணைப்பு, 1,55,312 பேருக்கு, பிரதமரின் 5 லட்ச ரூபாய் மதிப்புள்ள மருத்துவ காப்பீடு திட்டம் 1,19,233 விவசாயிகள் வங்கிக் கணக்குக்கு, வருடம் 6000 ரூபாய், 5208 கோடி ரூபாய் முத்ரா கடன் என, மத்திய அரசு வழங்கிய நலத் திட்டங்கள் ஏராளம்.

வரும் பாராளுமன்றத் தேர்தலில், தமிழகம் முழுவதும், பாஜக கூட்டணி வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அரசியல் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் கரங்களை வலுப்படுத்த வேண்டும். இவ்வாறு மாநில தலைவர் அண்ணாமலை அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top