திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் பெய்த கனமழையின்போது பலர் வீடுகளை இழந்தனர். அது போன்றவர்களுக்கு மத்திய அரசு சார்பில் புதிய வீடு கட்டித்தரப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். நிர்மலா சீதாராமனின் இந்த அறிவிப்பு வீடுகளை இழந்தவர்களுக்கு மிகப்பெரிய ஆறுதலாக அமைந்துள்ளது.
கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் தென்காசி ஆகிய நான்கு மாவட்டங்களில் கடந்த டிசம்பர் 16ம் தேதி முதல் 17ம் தேதி வரை மிக அதிதிகனமழை பெய்தது. இதனால் ஆறு, குளங்கள், ஏரி, குட்டை என அனைத்து நீர்நிலைகளிலும் வெள்ளம் நிரம்பி கிராமத்திற்குள் புகுந்தது. திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்கள் மிக கடுமையான சேதாரத்தை சந்தித்தது.
பல வீடுகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. தங்களின் வீடுகளையும், உடமைகளையும் இழந்து நிற்கதியாய் மக்கள் தவித்து வந்தனர். அதே நேரத்தில் வெள்ளத்தில் சிக்கி 50க்கும் மேற்பட்டோர்கள் உயிரிழந்தனர்.
இந்த நிலையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று (டிசம்பர் 26) தூத்துக்குடி மாவட்டத்தில் மழை வெள்ளபாதிப்பை ஆய்வு செய்ய வந்திருந்தார். அப்போது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்தில் வெள்ள சேதாரங்களை கேட்டறிந்தார்.
அதனை தொடர்ந்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பல இடங்களை பார்வையிட்டார். அப்போது தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு பகுதியில் அவர் சென்ற போது அங்கிருந்த பெண்கள் அவரை கைகூப்பி வணங்கினர்.
இதனை பார்த்த உடனே நிர்மலா சீதாராமன், உடனடியாக காரில் இருந்து இறங்கி அவர்களிடம் சென்று பேசினார். அப்போது அந்தப் பெண்கள் வெள்ளத்தில் தாங்கள் சந்தித்த இன்னல்கள் குறித்தும், பாதிப்புகள் குறித்தும் கண்ணீர் மல்க தெரிவித்தனர்.
இதனை கேட்ட நிர்மலா சீதராமன், அவர்களின் கையை பிடித்து அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார். அப்போது அங்கிருந்த சில பெண்கள் தங்கள் வீடுகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதாக கூறி அழுதனர்.
இதனைத் தொடர்ந்து, வெள்ளத்தில் வீடு இழந்தவர்களுக்கு பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வீடு கட்டித் தர நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். இந்த திட்டத்திற்கு நீண்டகாலம் ஆகாது. ஒருசில மாதங்களிலேயே வீடுகள் கட்டிக் கொடுக்கப்படும் என்றார். மேலும், இதுதொடர்பாக பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்குமாறு அவர் கேட்டுக் கொண்டார். நிர்மலா சீதாராமன் இவ்வாறு கூறியதை கேட்டு அங்கிருந்தவர்கள் அவரிடம் கண்ணீர் விட்டபடி நன்றி கூறினர்.