எம்.பில்., பட்டப்படிப்பில் இனி சேர வேண்டாம் என மாணவர்களுக்கும் எம்.பில்., மாணவர் சேர்க்கையை நிறுத்த வேண்டும் என கல்லூரிகளுக்கும் பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) அறிவுறுத்தியுள்ளது.
கடந்த 1977ம் ஆண்டு முதல் எம்.பில் பட்டப்படிப்பு பல்கலைக்கழகங்களில் அறிமுகம் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து எம்.எஸ்.சி., எம்.ஏ. முதுநிலை பட்டப்படிப்பு முடித்தவர்கள் எம்.பி.எல். படிப்பில் சேர்ந்தால் மட்டுமே கல்லூரி ஆசிரியர் மற்றும் பல்கலைக்கழகங்களில் நியமனம் செய்யப்பட்டனர். இந்த தகுதி பல ஆண்டுகளாக இருந்து வந்தது.
இதற்கிடையே 2022ம் ஆண்டு ஆசிரியர் பணியமர்த்தும் முறையை மாற்றியமைத்த பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி), ஆசிரியர் பணிக்கு குறைந்தபட்ச தகுதியை நிர்ணயித்தது. அதில் குறிப்பிட்டுள்ளபடி எம்.பில்., பட்டம் என்பது இனி வழக்கத்தில் இருக்காது என தெரியவந்தது. இந்த நிலையில் எம்.பில்., பட்டப்படிப்பில் இனிமேல் சேர வேண்டாம் என மாணவர்களுக்கு யுஜிசி அறிவுறுத்தியுள்ளது.
அதே நேரத்தில் எம்.பில்., நிறுத்தப்பட்டுள்ளதால் மாணவர் சேர்க்கையை நிறுத்த கல்லூரிகளுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.