குடியுரிமை சட்டம் அமல்படுத்துவதை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் பாஜக ஐடி விங் உறுப்பினர்கள் கூட்டம் நேற்று (டிசம்பர் 26) நடைபெற்றது. இதில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதில் மத்திய உள்துறை அமித்ஷா பேசியதாவது:
குடியுரிமை சட்டம் அமல்படுத்துவதை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது. இச்சட்டத்தை அமல்படுத்துவதற்கு பாஜக உறுதி பூண்டுள்ளது.
இந்த விவகாரத்தில் மக்களை மம்தா பானர்ஜி தவறாக வழிநடத்துகிறார். வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் மேற்கு வங்க மாநிலத்தில் 35க்கும் மேற்பட்ட இடங்களில் பாஜக வெற்றி பெறும்.
அடுத்து வரும் சட்டசபை தேர்தலில் மாநிலத்தில் ஆட்சியை கைப்பற்ற கடுமையாக உழைக்க வேண்டும். மாநிலத்தில் நாம் ஆட்சி செய்யும்போது, ஊடுருவல், பசு கடத்தல் ஆகியவற்றிற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும். மதரீதியில் துன்புறுத்தப்பட்ட மக்களுக்கு குடியுரிமை வழங்கப்படும். இவ்வாறு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசினார்.