ஈரோடு – திருநெல்வேலி விரைவு ரயிலை செங்கோட்டை வரை நீட்டிப்பு செய்த மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வின் வைஷ்ணவுக்கு தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை நன்றி தெரிவித்துள்ளார்.
தென்மாவட்ட மக்கள் அதிகளவில் வணிக ரீதியாக ஈரோட்டிற்கு வந்து செல்கின்றனர். அவர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு ரயில் மூலம் திரும்புவார்கள். ஆனால் ஈரோட்டில் இருந்து திருநெல்வேலி வரை மட்டுமே ரயில் செல்வதாகவும் அதனை செங்கோட்டை வரை நீட்டிப்பு செய்ய வேண்டும் எனவும் பாஜக தலைவர் அண்ணாமலையிடம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இதனை தொடர்ந்து பாஜக தலைவர் அண்ணாமலை மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வின் வைஸ்ணவை நேரில் சந்தித்து ஈரோடு விரைவு ரயிலை செங்கோட்டை வரை நீட்டிப்பு செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்த நிலையில், மத்திய ரயில்வே துறை அமைச்சகம், ஈரோடு-திருநெல்வேலி விரைவு ரயில் செங்கோட்டை வரை நீட்டிக்க ஒப்புதல் அளித்துள்ளது.
இது தொடர்பாக தனது எக்ஸ் வலைத்தளப் பதிவில் மாநில தலைவர் அண்ணாமலை கூறியிருப்பதாவது:
ரயில்வே அமைச்சர் அஷ்வின் வைஷ்ணவ் தமிழக பாஜகவின் கோரிக்கையை ஏற்று ஈரோடு-திருநெல்வேலி விரைவு ரயில் செங்கோட்டை வரை நீட்டிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதற்கு தமிழக பாஜக சார்பில் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.
மேலும் நமது ரயில்வே அமைச்சகத்தின் இந்த முடிவால் தென்காசி மாவட்ட மக்கள் பெரிதும் பயனடைவார்கள் எனத் தெரிவித்துள்ளார்.