தமிழக விவசாயிகளை எப்போதும் பதட்ட நிலையில் ஊழல் திமுக அரசு வைத்திருப்பதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்;
தமிழகத்தில் பல புதிய தொழிற்சாலைகள் உருவாவதும், அதன் மூலம் தமிழக இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் பெருகுவதையும் தமிழக பாஜக என்றும் வரவேற்று, ஆதரித்தே வந்துள்ளது. ஆனால் அரசுக்குச் சொந்தமான பல ஆயிரம் ஏக்கர் நிலங்கள் இருக்க விவசாய நிலங்களை அழித்து, அவற்றில்தான் தொழிற்பேட்டைகள் அமைப்போம் என்ற திமுகவின் பிடிவாதம் பலத்த சந்தேகத்தை எழுப்புகிறது.
கடந்த 2022ஆம் ஆண்டு, கோவை மாவட்டத்தில் அன்னூர் பகுதியில் சிப்காட் அமைக்க, சுமார் 4,000 ஏக்கர் விவசாய நிலங்களைக் கையகப்படுத்த முயற்சி செய்தனர். பொதுமக்கள் மற்றும் பாஜகவின் கடுமையான எதிர்ப்பை அடுத்து, நிலம் கையகப்படுத்துதல் நிறுத்தப்பட்டது.
இந்த ஆண்டு, திருவண்ணாமலை மாவட்டத்தில், திமுக அரசு விவசாய நிலங்களைக் கையகப்படுத்த முயற்சி செய்த போது, அதனை எதிர்த்துப் போராடிய விவசாயிகள் மீது குண்டாஸ் சட்டத்தில் வழக்கு தொடரப்பட்டது. பாஜகவினரின் கடும் எதிர்ப்பை அடுத்து, குண்டாஸ் வழக்கு ரத்து செய்யப்பட்டது.
தற்போது கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த புல்லூர் கிராமத்தில் சுமார் 400 ஏக்கர் விவசாய நிலங்களைக் கையகப்படுத்துவதற்கான முயற்சிகளில் திமுக அரசு ஈடுபட்டுள்ளதாகத் தெரிகிறது. இதனை எதிர்த்து முதன்முதலாக தமிழக பாஜக குரல் கொடுத்தது. கடந்த டிசம்பர் 15, 2023 அன்று, கடலூர் மாவட்ட பாஜக நிர்வாகிகள் சார்பில், திட்டக்குடி தாலுகா துணை தாசில்தார் அவர்களிடம் மனு கொடுக்கப்பட்டது. இந்தப் பகுதியில் நெல், கரும்பு, சோளம், மரவள்ளி உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி செய்து வரும் 163 விவசாயக் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிப்புக்குள்ளாகும் என்றும், ஏற்கனவே அருகிலுள்ள ஆசனூர் தொழிற்பேட்டை அமைக்கக் கையகப்படுத்தப்பட்ட நிலம் பயன்படுத்தாமல் இருப்பது குறித்தும், விவசாய நிலங்களை அழித்து தொடங்கப்பட்ட இறையூர் மற்றும் ஏ.சித்தூர் ஆலைகள் செயல்படாமல் இருப்பது குறித்தும் அந்த மனுவில், கடலூர் மாவட்ட பாஜக நிர்வாகிகள் விளக்கமாகக் கூறியிருந்தனர்.
ஒருபுறம், மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு.நரேந்திரமோடி அவர்கள், கிருஷி சிஞ்சாய் யோஜனா திட்டம் மூலம் நீர்ப் பாசன வசதி மற்றும் மேலாண்மை மூலம் விவசாயத்தைப் பெருக்க சுமார் 2,900 கோடி ரூபாய் வழங்கியுள்ள நிலையில், திமுக அரசோ, விவசாய நிலங்களை அழிப்பதையே நோக்கமாக வைத்திருக்கிறது.
தமிழகத்தில் முதன் முதலாக திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் 70 லட்சம் ஹெக்டேர் விவசாய நிலங்கள் இருந்தன. ஆனால் தற்போது 46 லட்சம் ஹெக்டேர் விவசாய நிலங்களே இருந்தன. போதிய பாசன வசதி இல்லாமலும், விவசாயிகளுக்கான நலத்திட்டங்கள் உரிய முறையில் கிடைக்காமலும், பல லட்சம் ஹெக்டேர் விவசாய நிலங்கள் அழிந்து விட்டன. ஆனாலும், தொடர்ந்து விவசாய நிலங்களைக் குறிவைத்து கையகப்படுத்தவே, திமுக முயற்சி செய்து வருகிறது.
உண்மையில் தொழில் வளர்ச்சி பெருக வேண்டுமென்பது திமுகவின் விருப்பமென்றால், அரசுக்குச் சொந்தமான, விவசாயப் பயன்பாடு இல்லாத நிலங்களில் தொழிற்பேட்டைகள் அமைத்து, அந்தப் பகுதிகளை முன்னேற்ற முயற்சிக்கலாம். ஆனால், தொடர்ச்சியாக, தமிழகம் முழுவதும் தொழிற்பேட்டை என்ற பெயரில் விவசாய நிலங்களை மட்டுமே ஆக்கிரமிப்பு முயற்சிப்பதும், பொதுமக்கள் எதிர்ப்பினை அடுத்து, அந்தத் திட்டங்களைக் கைவிடுவதும், திமுகவின் உண்மையான நோக்கம் என்ன என்ற கேள்வியை எழுப்புகிறது.
தொழில் வளர்ச்சி என்பது மாநில நலனுக்கு முக்கியமான ஒன்றுதான். ஆனால், விவசாயத்தை அழித்துதான் தொழில் வளர்ச்சி கொண்டு வருவோம் என்ற திமுகவின் நிலைப்பாடு ஆபத்தானது மற்றும் உள்நோக்கம் கொண்டது. உடனடியாக விவசாய நிலங்களை அழித்து தொழிற்பேட்டை அமைக்கும் திட்டங்களைக் கைவிட்டு, ஏற்கனவே அமைக்கப்பட்டு பலனில்லாமல் இருக்கும் தொழிற்பேட்டைகளை மீண்டும் பயன்படுத்தத் தொடங்க வேண்டும் என்றும், விவசாயிகளை எப்போதும் பதட்ட நிலையில் வைத்திருப்பதைத் தவிர்க்க வேண்டுமென்றும் திமுக அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு மாநில தலைவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.