72 குண்டுகள் முழங்க விடை பெற்றார் கேப்டன் விஜயகாந்த்!

தேமுதிக தலைவரும், நடிகருமான கேப்டன் விஜயகாந்த் அவருடைய கட்சி அலுவலகத்தில் 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

விஜயகாந்த் கடந்த டிசம்பர் 26ம் தேதி மருத்துவப் பரிசோதனைக்காக சென்னை ராமாவரத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது.

இதனை தொடர்ந்து அவருடைய சளி மாதிரி எடுத்து சோதனை செய்யப்பட்டதில் அவருக்கு நிமோனியா தொற்று ஏற்பட்டுள்ளது தெரியவந்தது. இதையடுத்து அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வந்த நிலையில் அவரது உயிர் நேற்று (டிசம்பர் 28) காலை 6.10 மணிக்கு காலமானார். எனினும் அவரது இறப்பு செய்தி நேற்று காலை 8.45 மணிக்குத்தான் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், விஜயகாந்தின் உடல் சாலிகிராமத்தில் உள்ள அவருடைய வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு முக்கிய பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தினர்.

இதனை தொடர்ந்து அவருடைய உடல் கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன், பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் நேரில் விஜயகாந்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். அதே போன்று திரையுலகினர், ரசிகர்கள், பொதுமக்கள் என பலரும் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

இடநெருக்கடி இருப்பதாக பாஜக தலைவர் அண்ணாமலை அறிக்கை வாயிலாகவும், அஞ்சலி செலுத்திய போதும் தொலைக்காட்சி வாயிலாக தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தார். இதனையடுத்து விஜயகாந்தின் உடல் தேமுதிக அலுவலகத்தில் இருந்து தீவுத்திடலுக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு மத்திய அரசு சார்பில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மலர் வளையம் வைத்து விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். அதே போன்று லட்சக்கணக்கான மக்கள் அஞ்சலியை செலுத்தினர். விஜயகாந்தின் உடல் மீண்டும் மதியம் 2.45 மணிக்கு ஊர்வலமாக கட்சி அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டது.

அவர்களது உடல் சந்தன பேழையில் வைக்கப்பட்டிருந்தது. பூ அலங்காரம் செய்யப்பட்ட வாகனத்தில் விஜயகாந்த் உடல் ஊர்வலமாக தேமுதிக தலைமை அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டது. வழி நெடுகிலும் பொதுமக்கள் விஜயகாந்திற்கு கேப்டன், கேப்டன் என கண்ணீரில் கதறி அழுதனர்.

லட்சோப லட்ச மக்கள் வெள்ளத்தில் விஜயகாந்தின் ஊர்வலம் தேமுதிக அலுவலகத்தை மாலை 5.45 மணிக்கு அடைந்தது. சந்தன பேழையில் வைக்கப்பட்ட விஜயகாந்தின் உடலுக்கு தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், முன்னாள் முதல்வர் ஓபிஎஸ், முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் இறுதி அஞ்சலி செலுத்தினர்.

இதைத் தொடர்ந்து 24 போலீசார் 3 முறை வானத்தை நோக்கி 72 குண்டுகள் முழங்க அரசு இறுதி மரியாதை செலுத்தப்பட்டது. அவரது உடலுக்கு குடும்ப வழக்கப்படி இறுதிச் சடங்குகளை மகன்கள் சண்முக பாண்டியனும், விஜய பிரபாகரனும் செய்தனர். இதையடுத்து குழிக்குள் இறக்கப்பட்ட அவரது உடலை கடைசியாக அவரது குடும்பத்தினர் பார்த்து கண்ணீர் சிந்தினர். இதையடுத்து விஜயகாந்தின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top