பெண் காவல் அதிகாரியை தாக்கிய திமுக நபரை உடனே கைது செய்க.. விடியாத அரசுக்கு அண்ணாமலை கண்டனம்!

திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவில் அறங்காவலர் குழு தலைவர் ஜீவானந்தத்தின் தம்பியும் திமுக நபருமான ஸ்ரீதரன் என்பவர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண் காவல் அதிகாரியை தாக்கியுள்ளார். உடனடியாக அவரை திமுக அரசு கைது செய்ய வேண்டும் என பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று (29.12.2023) வெளியிட்டுள்ள அறிக்கையில்;  

திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்தே, தமிழகம் முழுவதும் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து, குற்றச் செயல்கள் தொடர்ச்சியாக நடந்து கொண்டிருக்கின்றன. அரசு அதிகாரிகளே மணல் கொள்ளையர்களால் கொலை செய்யப்படுவதும், திமுகவினரால், காவல்துறை அதிகாரிகள் மிரட்டப்படுவதும், பெண் காவலர்கள் பாலியல் சீண்டலுக்கு உள்ளாவதும் என, அரசு இயந்திரம் முற்றிலுமாகச் செயலிழந்திருக்கிறது.

இந்த நிலையில், திருவண்ணாமலை கோவிலில், பாதுகாப்புப் பணியில் இருந்த பெண் காவல் ஆய்வாளரை, திமுக மாநிலச் செயற்குழு உறுப்பினர் ஸ்ரீதரன் என்ற நபர், கன்னத்தில் அறைந்திருக்கிறார் என்ற செய்தி திமுக ஆட்சியில், காவல்துறையின் மாண்பு எந்த அளவுக்கு கீழிறங்கியிருக்கிறது என்பதைக் காட்டுகிறது.

திமுக கட்சிக்காரர் என்ற ஆணவத்தில், பொதுமக்கள் முன்னிலையில் பெண் காவல்துறை அதிகாரியையே தாக்க முடியுமென்றால், சாதாரண பொதுமக்கள் நிலை என்ன? தனது 2006 – 2011 ஆட்சிக் காலத்தில் செய்த அடாவடிகளால், தொடர்ந்து பத்து ஆண்டுகள் ஆட்சிக்கு வர முடியாமல் இருந்ததை மறந்து விட்டதா திமுக?

பொதுமக்கள் பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு. திமுக குண்டர்களைப் போல, பொதுமக்களும் சட்டத்தை தங்கள் கையில் எடுத்தால், திமுகவினருக்குத் தெருவில் கூட இடம் இருக்காது என்பதை மறந்து விட வேண்டாம்.

பெண் காவல் அதிகாரியைத் தாக்கிய ஸ்ரீதரன் என்ற திமுக நபரை உடனடியாகக் கைது செய்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், திருவண்ணாமலை கோவில் அறங்காவலர் குழுத் தலைவராக இருக்கும் அவரது அண்ணன் ஜீவானந்தம் என்ற நபரை, உடனடியாகப் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன். இவ்வாறு மாநில தலைவர் அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top