தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்களை நியமிக்க ஒரு செயல்பாட்டு முறையை உருவாக்க வகை செய்யும் மசோதாவுக்கு ஜனாதிபதி திரௌபதி முர்மு நேற்று (29.12.2023) ஒப்புதல் அளித்தார்.
தேர்தல் ஆணையர்கள் நியமன சட்ட திருத்த மசோதா – 2023ஐ சமீபத்தில் மத்திய அரசு இயற்றியது. அதில் தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் பிற தேர்தல் ஆணையர்களை நியமிக்கும் குழுவில் பிரதமர், எதிர்க்கட்சி தலைவர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி இடம் பெறுவர் என்ற நடைமுறையை மாற்றி, தலைமை நீதிபதிக்கு பதிலாக கேபினட் அந்தஸ்து பெற்ற மத்திய அமைச்சர் இடம் பெறுவார் என்ற விதிமுறை சேர்க்கப்பட்டது. இதையடுத்து இந்த மசோதா மக்களவை மற்றும் மாநிலங்களவையில் எவ்வித எதிர்ப்பும் இல்லாமல் ஒருமனதாக நிறைவேறியது.
இந்த நிலையில், இம்மசோதாவுக்கு ஜனாதிபதி திரௌபதி முர்மு நேற்று (டிசம்பர் 29) ஒப்புதல் அளித்தார். இதன் வாயிலாக தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்கள் நியமனத்துக்கு சட்ட அமைச்சர் தலைமையில், இரு செயலர்கள் அடங்கிய தேடல் குழு அமைக்கப்படும்.
இந்த குழு தகுதி வாய்ந்த ஐந்து பேரின் பெயர்களை அந்த பதவிகளுக்கு பரிந்துரை செய்யும். அவர்களில் தகுதியான நபர்களை, தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்களாக பிரதமர் தலைமையிலான குழு நியமிக்கும்.