நமது பாரதத்தின் ஆன்மிக கலாச்சாரத்தின் அடையாளமாக திகழ இருக்கும் அயோத்தி ஸ்ரீ ராமர் கோவில் கும்பாபிஷேக விழா, ஜனவரி 22 அன்று நடைபெற உள்ளது. கடந்த 2020ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்த கோவில் திருப்பணிகள் நிறைவடைந்து, வருகின்ற 22ம் தேதி அன்று பிரதமர் கரங்களால் திறக்க வைக்கப்பட உள்ளது.
பகவான் ஸ்ரீராமர் கோவில் கும்பாபிஷேகம், பாரதத்தின் ஒட்டுமொத்த மக்களுக்கும் மற்றுமொரு தீபாவளிப் பண்டிகையாக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. பிரதமர் மோடி அவர்கள், கோவில் திறப்பு தினத்தன்று நாட்டு மக்கள் அனைவரையும் அவரவர் இல்லங்களில் தீபங்கள் ஏற்றிக் கொண்டாடக் கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்நிகழ்விற்காக ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா.ஜ.க., பிரமுகர்கள், தன்னார்வலர்கள் என பலரும் அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் பொதுமக்களை சந்தித்து அழைப்பிதழ் மற்றும் அட்சதையை வழங்கி வருகின்றனர்.
இந்த நிலையில், அயோத்தி ஸ்ரீ ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெறுவதை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு ஆடியோ வெளியிட்டுள்ளார்.
ஆடியோ பதிவில் ‘ராம், ராம்’ என துவக்கி தொடர்ந்து அவர் பேசியதாவது: ”வரும் 22ம் தேதி நாட்டு மக்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்க்கும் அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடக்க உள்ளது.
இந்த புனித நிகழ்வில் நான் பங்கேற்பது பெரும் பாக்கியமாக கருதுகிறேன். இன்று முதல் 11 நாட்கள் விரதம் துவக்கி உள்ளேன். உணர்வுப்பூர்வமாக புதிய சக்தியை பெறுகிறேன். நான் ஒரு புத்துணர்ச்சியை உணர்கிறேன். இது போன்ற உணர்வை நான் அறிந்ததில்லை. ராம பக்தர்கள் என்னை ஆசீர்வதிக்க வேண்டும்.
இது நாட்டு மக்களின் விழா, அனைவரையும் முன்னிலைப்படுத்த கடவுள் என்னை படைத்துள்ளார். சுவாமி விவேகானந்தர், சத்ரபதிசிவாஜி ஆகியோரை நினைவுகூர்கிறேன். ஆன்மிகம், நமது கலாசாரத்தை உலக அளவில் புகழை பெற்றுதந்த விவேகானந்தரின் பிறந்த நாள் இன்று. அவரை நினைக்கும் போது ஒரு உத்வேகம் பிறக்கிறது. அவரது ஆற்றலும், உற்சாகம் இளைஞர்களுக்கு ஒரு தூண்டுகோலாக அமைகிறது. ஜெய் ஸ்ரீ ராம், ஜெய் ஸ்ரீ ராம்” என உரையை முடித்தார்.