மும்பையில் 17,840 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டிருக்கும் நாட்டின் மிக நீளமான ‘அடல் சேது’ கடல்வழிப் பாலத்தை பாரத பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஜனவரி 12) நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
மகாராஷ்டிரா மாநிலத்தின் தலைநகர் மும்பையையும், நவிமும்பையையும் இணைக்கும் வகையில், அரபிக்கடலில் 22 கி.மீ. தொலைவுக்கு மிக நீளமான பாலம் கட்டுவதற்கு கடந்த 2016-ம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார்.
இதன் கட்டுமானப் பணிகள் 2018 ஏப்ரல் 24-ம் தேதி தொடங்கி, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நிறைவடைந்தது. இதற்கான மொத்த செலவு 17,840 கோடி ரூபாய்.
இப்பாலம், மும்பையின் சிவ்ரியில் தொடங்கி நவிமும்பையின் புறநகரான சிர்லேவில் முடிவடைகிறது. இப்பாலத்துக்கு ‘அடல் சேது’ என மறைந்த முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் அவர்களின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
மும்பை – நவிமும்பை இடையேயான 15 கி.மீ. பயண தூரத்தை குறைப்பதோடு, இரண்டு மணி நேரமாக இருந்த பயண நேரத்தையும் 20 நிமிடங்களாக குறைத்திருக்கிறது.
இந்த பிரம்மாண்ட பாலத்தை பாரதப் பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக மகாராஷ்டிரா மாநிலத்துக்குச் சென்ற பிரதமருக்கு, விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
ஹோட்டல் மிர்ச்சி சௌக்கில் இருந்து சுவாமி மஹாராஜ் சௌக் வரை பிரதமர் நரேந்திர மோடி காரில் பேரணியாகச் சென்றார். அப்போது, வழிநெடுகிலும் ஏராளமான லட்சக்கணக்கான தொண்டர்கள் மலர்தூவி பிரதமர் மோடியை உற்சாகமாக வரவேற்றனர்.
தொடர்ந்து, கோதாவரி நதிக்கரையில் அமைந்துள்ள ராம்குந்துக்குச் சென்ற பிரதமர் மோடி, அங்கு பூஜை செய்து, ஆரத்தி காண்பித்து வழிபாடு நடத்தினார். தொடர்ந்து, பஞ்சவடி பகுதியில் உள்ள காலாராம் கோவிலிலும் பிரதமர் மோடி வழிபாடு நடத்தினார்.
இதன் பிறகு, நாஷிக்கில் 27-வது தேசிய இளைஞர் திருவிழாவை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். பிறகு, அங்கிருந்து மும்பைக்கு வந்த பிரதமர் மோடி, அடல் சேது கடல்வழி பாலத்தைத் திறந்து வைத்து, நவிமும்பையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார்.