சனாதனம் குறித்த சர்ச்சை பேச்சு: உதயநிதி ஸ்டாலினுக்கு பீகார் சிறப்பு நீதிமன்றம் சம்மன்!

சென்னையில் நடைபெற்ற தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் சனாதன ஒழிப்பு மாநாட்டில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றார்.

அப்போது அவர் பேசும்போது, “இந்த மாநாட்டின் தலைப்பை சனாதன எதிர்ப்பு மாநாடு என்று போடாமல் சனாதன ஒழிப்பு மாநாடு என்று நீங்கள் போட்டிருக்கிறீர்கள். சிலவற்றை நாம் ஒழிக்கத்தான் வேண்டும். எதிர்க்க முடியாது. கொசு, டெங்கு காய்ச்சல், மலேரியா, கொரோனா இதையெல்லாம் நாம் எதிர்க்கக் கூடாது. ஒழித்துக்கட்ட வேண்டும். அப்படித்தான் இந்த சனாதனம். சனாதனம் என்பதை எதிர்ப்பதைவிட, ஒழிப்பதே நாம் செய்ய வேண்டிய முதல் வேலை” என்று தெரிவித்திருந்தார்.

இவரது பேச்சுக்கு நாடு முழுவதும் கடுமையான எதிர்ப்புகள் கிளம்பியது. உத்தரபிரதேசம், பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் உதயநிதிக்கு எதிராக காவல் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டது. மேலும் நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது. உதயநிதியின் பேச்சு இந்தியில் மொழிபெயர்க்கப்பட்டு இந்தி பேசும் மாநிலங்களில் ஒளிபரப்பப்பட்டதால் தான் மூன்று மாநிலங்களில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது என்று நம்பப்படுகிறது.

இந்த நிலையில், உதயநிதி ஸ்டாலின் மீது பீகாரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான வழக்கு விசாரணை பாட்னாவிலுள்ள எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதி சரிகா வஹாலியா, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், வரும் பிப்ரவரி 13-ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிட்டார்.

இந்த வழக்கு முதலில் பாட்னா விலுள்ள நகர ஜூடிஷியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. பின்னர் கடந்த 6-ம் தேதி வழக்கு சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. பாட்னா உயர் நீதிமன்றத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் கவுசலேந்திர நாராயண், இந்த வழக்கை தொடுத்துள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top